மனைவியை செல்போனில் படம் பிடித்த புதுமாப்பிள்ளை மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து சாவு


மனைவியை செல்போனில் படம் பிடித்த புதுமாப்பிள்ளை மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 21 March 2017 4:10 AM IST (Updated: 21 March 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 4 மாதத்தில், மலை உச்சியில் வைத்து மனைவியை செல்போனில் படம் பிடித்த புதுமாப்பிள்ளை தவறி விழுந்து பலியானார்.

மும்பை

திருமணமான 4 மாதத்தில், மலை உச்சியில் வைத்து மனைவியை செல்போனில் படம் பிடித்த புதுமாப்பிள்ளை தவறி விழுந்து பலியானார்.

புதுமணத்தம்பதி

சத்தாரா மாவட்டத்தை சேர்ந்தவர் தனஞ்சய் ஜாதவ்(வயது32). இவரது மனைவி நீலம்(25). இந்த தம்பதிக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. புதுமணத்தம்பதிகள் இருவரும் சம்பவத்தன்று சத்தாரா சஜ்ஜன்காட் மலைக்கோட்டையில் உள்ள அனுமார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது மலை உச்சியில் சென்று இயற்கை அழகை ரசித்தனர். அப்போது தனஞ்சய் ஜாதவ் தனது மனைவியை செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.

மலை உச்சியின் ஒரு ஒரத்தில் நின்றபடி படம் பிடித்துக்கொண்டிருந்த அவர் திடீரென கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார்.

பிணமாக மீட்பு

தன் கண்முன்னேயே கணவர் மலையில் இருந்து கீழே விழுந்த கோர காட்சியை கண்டதும் அதிர்ச்சியில் நீலம் மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பக்தர்கள் நீலம் மயங்கிக்கிடப்பதை கண்டு முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தினார்கள். மயக்கம் தெளிந்ததும் நீலம் கணவர் மலையில் இருந்து விழுந்து விட்டதை கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் உடனே சத்தாரா போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் பள்ளத்தாக்கில் தேடி அலைந்து வெகுநேரத்திற்கு பிறகும் தனஞ்சய் ஜாதவை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story