திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2017 4:45 AM IST (Updated: 21 March 2017 4:22 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா, சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

நேற்று 7–வது நாளாக அவர்களுடைய போரட்டம் தொடர்ந்தது. நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

சமைத்து சாப்பிட்டனர்

போராட்டத்தின் போது உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். அப்போது ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே சமையல் செய்யப்பட்டது.

அவர்கள் அங்கு அமர்ந்தே மதிய உணவு சாப்பிட்டுவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், அரசு எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும். மேலும் இன்று மாலை வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story