‘25 சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும்’ திருட்டு வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு


‘25 சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும்’ திருட்டு வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 22 March 2017 1:00 AM IST (Updated: 21 March 2017 7:28 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் கைதானவருக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அதாவது, 25 சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் கைதானவருக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அதாவது, 25 சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

திருட்டு வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 46). இவர் கடந்த 9–9–2010 அன்று அதே பகுதியைச் சேர்ந்த கோமுக்கனி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.56 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கைதான முருகன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு கோவில்பட்டி 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

விசாரணைக்கு ஆஜராகவில்லை

இந்த வழக்கு விசாரணை கடந்த 8–ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் முருகன் ஆஜராகவில்லை. எனவே முருகனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வீரணன் உத்தரவிட்டார். இதையடுத்து கொப்பம்பட்டி போலீசார் கடந்த 16–ந் தேதி முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே முருகன் மீண்டும் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.

நிபந்தனை ஜாமீன்

ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி வீரணன், முருகனுக்கு 2 நபர்களின் உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கினார். அப்போது நூதனமான ஒரு நிபந்தனையுடன் அவர் ஜாமீன் வழங்கினார்.

அதாவது, முருகன் ஊரில் உள்ள 25 சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும். அதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை தவறும்பட்சத்தில் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி வீரணன் உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட முருகன், ஜாமீன் பெற்று சென்றார்.


Next Story