நாசரேத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை வீட்டில் கொள்ளை முயற்சி


நாசரேத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை வீட்டில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 22 March 2017 1:00 AM IST (Updated: 21 March 2017 9:40 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாசரேத்,

நாசரேத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை

நாசரேத் கதீட்ரல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி லலிதா. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. மகன், அமெரிக்க நாட்டில் வசித்து வருகிறார். மகள், பெங்களூரில் வசித்து வருகிறார்.

கடந்த 17–ந்தேதி ஜஸ்டின் தன்னுடைய மனைவியுடன் பெங்களூரில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார். எனவே ஜஸ்டினின் வீட்டை அவரது தங்கை ஜூலியட் பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் நைசாக ஜஸ்டின் வீட்டின் கதவை இரும்பு கம்பியால் நெம்பி உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். வீட்டில் இருந்த 2 அறைகளின் கதவுகளையும் உடைத்து திறந்தனர். அங்கிருந்த 2 பீரோக்களையும் உடைத்து, அதில் இருந்த பொருட்களை திருடிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

நேற்று காலையில் ஜூலியட் தனது அண்ணனின் வீட்டுக்கு சென்றபோது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் நாசரேத் போலீசாருக்கும், ஜஸ்டினுக்கும் தகவல் தெரிவித்தார்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், சப்– இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். கைரேகை துணை போலீஸ் சூப்பிரண்டு நாகரத்தினம் கொள்ளைமுயற்சி நடந்த வீட்டில் பதிவான தடயங்களை பதிவு செய்தார்.

ஜஸ்டின் பெங்களூரில் இருந்து திரும்பி வந்த பின்னரே கொள்ளை போன பொருட்களின் மதிப்பு தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story