பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல்; 3 பேர் சாவு
பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெருந்துறை
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 40). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருடைய மனைவி ஈஸ்வரி (33). இவர்களுடைய மகன் நகுலன் (12), மகள் ஜெயபாரதி (6). கதிரவனின் மைத்துனர் மனோகரன் (27). ஈஸ்வரியின் பாட்டி லட்சுமி (74).
இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள தங்களுடைய உறவினர் வீட்டில் நடைபெற்ற காது குத்து விழாவுக்கு காரில் சென்றனர். இவர்களுடன் கதிரவனின் உறவினரான எம்.லட்சுமி (70), நண்பரான சந்திரன் ஆகியோரும் சென்றனர்.
சாவுவிழா முடிந்ததும் அனைவரும் மீண்டும் காரில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை கதிரவன் ஓட்டினார். பெருந்துறையை அடுத்த வாவிக்கடை அருகே நேற்று அதிகாலை 3 மணி அளவில் சென்றபோது அங்கு ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் ஈஸ்வரி, எம்.லட்சுமி, சந்திரன் ஆகிய 3 பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரில் இருந்த கதிரவன், நகுலன், ஜெயபாரதி, மனோகரன், ஈஸ்வரியின் பாட்டி லட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சிகிச்சைஇதை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.