பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ம.தி.மு.க.வினர் ஊர்வலம்
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கோவையில் ம.தி.மு.க.வினர் ஊர்வலம் நடத்தினர்.
கோவை
கோவை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு ம.தி.மு.க.அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் கோவை சித்தாபுதூரில் உள்ள ம.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, மகளிர் பாலிடெக்னிக், டாக்டர் பாலசுந்தரம் ரோடு, அண்ணாசிலை வழியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தை அடைந்தது. பின்னர் அங்கு சு.துரைசாமி பேசும்போது கூறியதாவது:–
பூரண மதுவிலக்குதமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி ம.தி.மு.க.சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றோம். இதற்காக கழக பொதுச்செயலாளர் வைகோ 5 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கலிங்கப்பட்டியில் அவரது 100 வயது நிரம்பிய தாயார் அங்குள்ள மதுக்கடையை மூடக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அந்த மதுக்கடை மூடப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த மதுக்கடையை திறக்க மாவட்ட நிர்வாகம் முயன்றது. இதனை தொடர்ந்து கலிங்கப்பட்டி ஊராட்சி தலைவரான வைகோவின் தம்பி, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து போராடுவோம்இருந்தபோதிலும் அந்த மதுக்கடை மூடப்படவில்லை. இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால் மாநில அரசு, வழக்கினை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது. இருந்தபோதிலும் உச்ச நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியானது என்றும், மதுக்கடையை மூட வேண்டும் என்று மூடப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியபோது, முதலில் 500, 2–வது 500 என்று மதுக்கடைகள் மூடப்பட்ட போதும், அந்த கடைகள் வியாபாரம் நடைபெறாத கடைகளாகும். ஆகவே பூரணமாக மதுவிலக்கை கொண்டு வந்து அனைத்து கடைகளையும் மூட வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவோம். தமிழகத்தில் மதுவினால் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்ஊர்வலத்தில் ஆடிட்டர் அர்ஜூனராஜ், டி.டி.அரங்கசாமி, ஆர்.சேதுபதி, மு.கிருஷ்ணசாமி, வெ.கா.ராமசாமி, என்.கே.ராமகிருஷ்ணன், சூரிநந்தகோபால், ராஜேந்திரன், கணபதி செல்வராஜ், ஆர்.சற்குணம், கருணாநிதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.