செத்துக்கிடந்த 8 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? வனத்துறை அதிகாரிகள் விசாரணை
பொங்கலூர் அருகே செத்துக்கிடந்த 8 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? வனத்துறை அதிகாரிகள் விசாரணை
பொங்கலூர்
பொங்கலூர் அருகே 8 மயில்கள் செத்துக்கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் 2–வது முறையாக நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயில்கள் செத்துக்கிடந்தனதிருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உகாயனூரில் பகுதியில் ஏராளமான மயில்கள் உள்ளன. இந்த நிலையில் உகாயனூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டம் அருகே 8 மயில்கள் செத்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு திருப்பூர் வனச்சரகர் மகேஷ், வனவர் சுப்பையா, உகாயனூர் கிராம நிர்வாக அதிகாரி ரம்யா ஆகியோர் சென்று பார்த்தனர். அப்போது காட்டுப்பகுதியில் ஆங்காங்கே 8 மயில்கள் செத்து கிடந்தன. அந்த மயில்களை நாய்கள் தின்று கொண்டிருந்தன. அதைப்பார்த்த வனத்துறை அதிகாரிகள் நாய்களை விரட்டி விட்டு, செத்து கிடந்த மயில்களை சாக்கு பைகளில் சேகரித்தனர். பின்னர் அவற்றை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–
கடும் நடவடிக்கைஇந்த பகுதியில் தொடர்ந்து மயில்கள் செத்து கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 35–க்கும் மேற்பட்ட மயில்கள் செத்து கிடந்ததும், அவை விஷத்தை தின்று இறந்திருக்கலாம்? என்ற சந்தேகம் இருப்பதாகவும், எனவே தொடர்ந்து மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் 2–வது முறையாக நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.