சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 2 தொழிலாளிகள் கருகி சாவு


சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 2 தொழிலாளிகள் கருகி சாவு
x
தினத்தந்தி 22 March 2017 3:06 AM IST (Updated: 22 March 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

பண்ட்வால் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளிகள் உடல் கருகி செத்தனர்.

மங்களூரு,

 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டாசு தொழிற்சாலை

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் அருகே கும்பலபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் கபூர் என்கிற கர்னல் சாகிப். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் ஓட்டு வீடு உள்ளது. அந்த வீட்டில் அவர் அரசு அனுமதி பெறாமல் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். அங்கு அதேப்பகுதியைச் சேர்ந்த சுந்தர பூஜாரி(வயது 39), ஹாசிம்(25) ஆகிய 2 பேர் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ளூர் திருவிழா நடைபெற இருந்தது. அதையொட்டி கபூர் நிறைய பட்டாசுகளை தயாரித்து விற்க திட்டமிட்டார். அதன்படி சுந்தர பூஜாரியும், ஹாசிமும் நேற்று முன்தினம் இரவு பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.

வெடித்து சிதறியது

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு தீப்பிடித்துக் கொண்டது. இதை சற்றும் எதிர்பாராத சுந்தர பூஜாரியும், ஹாமிமும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ, அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த சத்தம் அப்பகுதியை அலற வைத்தது.

பட்டாசு தொழிற்சாலை நடந்து வந்த ஓட்டு வீட்டின் மேற்கூரை மிகவும் சேதமடைந்தது. பட்டாசுகள் வெடித்ததில் ஓடுகளும் உடைந்து சிதறி அப்பகுதியில் உள்ள பல வீடுகளின் மேல் விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அந்த பட்டாசு தொழிற்சாலையை பார்த்தனர். அப்போது அது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

2 பேர் உடல் கருகி பலி

இதையடுத்து அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் பட்டாசு தொழிற்சாலையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சுந்தரபூஜாரியும், ஹாசிமும் உடல் கருகி பலியாகி இருந்தது தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி விட்டலா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், சுந்தர பூஜாரி மற்றும் ஹாமிம் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கபூரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story