எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் தீர்மானம்
எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும்
மதுரை,
தென் இந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சிலின் வெள்ளி விழா மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது. அமைப்பின் தலைவர் வக்கீல் மணவாளன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வக்கீல் சிங்கராசு, அமைப்பு செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் வீரபத்திரன் வரவேற்றார்.
மாநாட்டில் திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி, சீனு ராமசாமி, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில், இயக்குனர் சமுத்திரக்கனிக்கு, மக்கள் கலைஞன் விருதும், இயக்குனர் சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குனர் விருதும் வழங்கப்பட்டது. மாநில பொருளாளர் தியாகராஜன், இளைஞர் அணி தலைவர் கப்பலூர் சரவணன், மாநில துணைத்தலைவர் சிவ.ராமநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர் போராட்டம்‘தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும். இதற்காக தொடர் போராட்டம் நடத்துவது. மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு தனி கட்டிடம் கட்ட வேண்டும். தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை தொகுத்து தமிழக அரசு நூலாக வெளியிட வேண்டும்.
பத்திரப்பதிவில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப்பொருட்களை பாலிதீன் பைகளில் பார்சல் செய்து வழங்கும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ரவிபாண்டியன் நன்றி கூறினார்.