வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு பரிந்துரை செய்ய விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு பரிந்துரை செய்ய விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x
தினத்தந்தி 25 March 2017 4:30 AM IST (Updated: 24 March 2017 8:48 PM IST)
t-max-icont-min-icon

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு பரிந்துரை செய்வதற்காக விவசாயியிடம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் பச்சையாப்பிள்ளை (வயது 35), விவசாயி. இவருடைய தாத்தா ரத்தினகவுண்டர் கடந்த 11.2.17 அன்று உடல்நலக்குறைவால் இறந்தார்.

இவருடைய பெயரில் இருந்த குடும்ப சொத்தை பாகம் பிரிப்பதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு பச்சையாப்பிள்ளை தனது தாய் சின்னப்பொன்னுவின் பெயரில் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 7–ந் தேதி விண்ணப்பித்திருந்தார்.

சின்னப்பொன்னுக்கு வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்காக அவரது குடும்ப உறுப்பினர்களின் விவரத்தை விசாரித்து சான்றிதழ் அனுப்பும்படி வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் வடசேமபாளையத்தை சேர்ந்த சந்திரகாசனுக்கு (38) தாசில்தார் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

ரூ.3 ஆயிரம் லஞ்சம்

அதன்படி சந்திரகாசன், மேலப்பட்டு கிராமத்திற்கு சென்று சின்னப்பொன்னுவின் குடும்ப உறுப்பினர்களின் விவரத்தை சேகரித்தார். அப்போது இதுசம்பந்தமான சான்றிதழை வருவாய் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டுமெனில் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என பச்சையாப்பிள்ளையிடம் கிராம நிர்வாக அலுவலர் சந்திரகாசன் கூறியதாக தெரிகிறது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பச்சையாப்பிள்ளை, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறினார். அதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே வாரிசு சான்றிதழ் கிடைக்க வருவாய் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்ய முடியும் என கறாராக கூறிய சந்திரகாசன், அந்த பணத்தை தன்னிடம் நேரில் வந்து கொடுக்கும்படி கூறினார்.

கிராம நிர்வாக அலுவலர் கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத பச்சையாப்பிள்ளை, இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை பச்சையாப்பிள்ளையிடம் கொடுத்து அதை சந்திரகாசனிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்துடன் பச்சையாப்பிள்ளை வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேற்று காலை சென்றார்.

அங்கு சந்திரகாசன் இல்லாததால் அவரை பச்சையாப்பிள்ளை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது சந்திரகாசன், தான் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் இருப்பதாகவும், தாலுகா அலுவலக வளாகத்திற்கு வந்து தன்னை நேரில் சந்தித்து பணத்தை தருமாறும் பச்சையாப்பிள்ளையிடம் கூறினார்.

அதன்படி பச்சையாப்பிள்ளை, சங்கராபுரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். லஞ்ச ஒழிப்பு போலீசாரும் அங்கு சென்று மறைவான இடத்தில் நின்று கண்காணித்தனர். பின்னர் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சந்திரகாசனிடம் ரூ.3 ஆயிரம் லஞ்ச பணத்தை பச்சையாப்பிள்ளை கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு விஸ்வேஸ்வர்அய்யா, இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சந்திரகாசனை மடக்கிப்பிடித்தனர்.

அதனை தொடர்ந்து சந்திரகாசனை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார், விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story