மாவட்ட செய்திகள்

மணப்பாறை ரெயில் நிலையத்தில் நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாட்டம் + "||" + Intercity Express train went and stood on the NEX

மணப்பாறை ரெயில் நிலையத்தில் நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாட்டம்

மணப்பாறை ரெயில் நிலையத்தில் நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாட்டம்
மணப்பாறை ரெயில் நிலையத்தில் நேற்று முதல்முறையாக இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது.

மணப்பாறை,

இதனை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் ரெயில்களின் பிரதான வழித்தடமாக மணப்பாறை ரெயில் நிலையம் உள்ளது. ஆனால் மணப்பாறை ரெயில் நிலையத்தில் பாண்டியன் மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இந்நிலையில் மணப்பாறையில் இருந்து மதுரைக்கு தினமும் பல்வேறு தொழில் மற்றும் வேலை நிமித்தமாக பலர் செல்கின்றனர். மேலும் வழக்கறிஞர்களும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு செல்கின்றனர். எனவே அவர்கள் சென்று வர வசதியாக திருச்சியில் இருந்து நெல்லைக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களும், அனைத்து கட்சியினரும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மேலும் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ரெயில்வே பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபுவை, மணப்பாறையை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் சந்தித்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறிய அவர், மார்ச் 25–ந் தேதி முதல் மணப்பாறை ரெயில் நிலையத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் என்று அறிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களிலும் மத்திய மந்திரிக்கும், சிபாரிசு செய்த திருச்சி சிவா எம்.பி.க்கும் நன்றி தெரிவித்து விளம்பர பதாகைகள் வைத்தனர்.

நின்று சென்றது

இந்நிலையில் மந்திரி அறிவித்தபடி நேற்று காலை திருச்சியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி சென்றது. இதையொட்டி முன்னதாக ரெயிலை வரவேற்பதற்காக அனைத்து கட்சியினரும் காலை முதலே மணப்பாறை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். மேலும் பொதுமக்களும் திரளான வந்திருந்தனர். மணப்பாறை ரெயில் நிலையத்திற்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றதும் அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஓடிச்சென்று ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இனிப்பு வழங்கினர். தொடர்ந்து ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர்.

மேலும் முதல் நாள் என்பதால் திருச்சியில் இருந்து சிலர் மணப்பாறை வரையிலும், மணப்பாறையில் இருந்து சிலர் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலிக்கும் அந்த ரெயிலில் பயணம் மேற்கொண்டனர். அந்த ரெயில் இங்கு நின்று செல்ல ஒரு நிமிடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் நாள் என்பதால் சிறிது நேரம் கூடுதலாக நின்று சென்றது. ரெயிலை இரண்டு நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மாலை நேரத்தில் நெல்லையில் இருந்து திருச்சி சென்றபோதும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.