மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்


மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 March 2017 4:30 AM IST (Updated: 28 March 2017 7:59 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

இலவச பயிற்சி வகுப்பு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் நடராஜன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்–1 மற்றும் தாள்–2 ஆகிய தேர்வுகள் அடுத்த மாதம்(ஏப்ரல்) 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வினை எதிர்கொள்ள தயாராகி வருபவர்கள் பயன்பெறும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

வெற்றி பெற வேண்டும்

அதன் அடிப்படையில், இந்த பயிற்சி வகுப்பில் மொத்தம் 160 இளைஞர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து பங்கேற்றுள்ளனர். தகுதித்தேர்வு தாள்–1 மற்றும் தாள்–2 ஆகிய இரண்டு தேர்வுகளையும் சிறப்பான முறையில் எழுதும் வகையில் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், சமூக அறிவியல், குழந்தை வளர்ச்சி மற்றும் ஆசிரியர் பணி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்பு வாரத்தின் 7 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பயிற்சியில் கலந்து கொண்டுள்ளவர்கள் பயிற்சினை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தகுதித்தேர்வினை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குனர் அபுபக்கர் சித்திக், பயிற்றுனர் மாதவன் உள்பட அரசு அலுவலர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story