ராசிபுரம் அருகே சுற்றிப்பார்க்க சென்றபோது வழிதவறினார்: மலைப்பகுதியில் 20 மணி நேரம் தவித்த கூரியர் நிறுவன ஊழியர் தீயணைப்புத்துறையினர்–இளைஞர்கள் மீட்டனர்


ராசிபுரம் அருகே சுற்றிப்பார்க்க சென்றபோது வழிதவறினார்: மலைப்பகுதியில் 20 மணி நேரம் தவித்த கூரியர் நிறுவன ஊழியர் தீயணைப்புத்துறையினர்–இளைஞர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 28 March 2017 11:00 PM GMT (Updated: 28 March 2017 4:48 PM GMT)

ராசிபுரம் அருகே சுற்றிப்பார்க்க சென்றபோது வழி தவறிய கூரியர் நிறுவன ஊழியர் சுமார் 20 மணி நேரம் மலைப்பகுதியில் தவித்தார்.

ராசிபுரம்,

அலவாய்மலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பழந்தின்னிப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது அலவாய்மலை. சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த அலவாய்மலையை சுற்றி 12 கோவில்கள் உள்ளன. சாலை வசதி இல்லாத அலவாய்மலை மீது உள்ள ஒத்தக்கல் பெருமாள் கோவில், சித்தர் கோவில் ஆகிய கோவில்களுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் நடந்து சென்று வழிபட்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதி இளைஞர்கள் இந்த மலைக்கு சென்று சுற்றிப்பார்ப்பது வழக்கம்.

இந்த நிலையில் வெண்ணந்தூர் அருகே உள்ள ஓ.சவுதாபுரம் பகுதியை சேர்ந்த தனியார் கூரியர் நிறுவன ஊழியர் கிருஷ்ணகுமார் (வயது 21) நேற்று முன்தினம் அலவாய்மலையை சுற்றிப்பார்க்க திட்டமிட்டார். இதற்காக அவர் தனது மோட்டார் சைக்கிளில் குருசாமிபாளையம் அருகே உள்ள ஜம்புபாலிக்கு மதியம் 12 மணிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் நடந்து மலையின் மீது ஏறி பெருமாள் கோவிலுக்கு சென்றார்.

வழி தெரியாமல் தவிப்பு

இதையடுத்து அவர் கீழே இறங்க முயன்றார். ஆனால், வழி தவறியதால் அவர் மலை உச்சியில் இருந்து சுமார் 300 அடிக்கு கீழ் இருந்த பாறைகள் பகுதிக்கு மதியம் 1 மணியளவில் வந்து சிக்கிக்கொண்டார். அங்கிருந்து அவரால் மேற்கொண்டு கீழே இறங்க முடியாததால் அங்கேயே பரிதவித்தார். இதுபற்றி அவர் தனது ஊரைச் சேர்ந்த கோபால் என்ற நண்பருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

அவர் கிருஷ்ணகுமாரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அவர்கள் தனது மகனை மீட்டு தரும்படி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரை கேட்டுக்கொண்டனர். உடனே, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (புதுச்சத்திரம்), சசிக்குமார் (வெண்ணந்தூர்), ராசிபுரம் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன், வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

20 மணி நேரத்துக்குப்பின் மீட்பு

இரவு 11 மணியளவில் தீயணைப்புத்துறையினர் மற்றும் இளைஞர்கள் 6 பேர் அடங்கிய குழுவினர் ஜம்புபாலி முருகன் கோவில் வழியாக அலவாய்மலைக்கு ஏறி கிருஷ்ணகுமாரை தேடினார்கள். விடிய, விடிய அலைந்து தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு கிருஷ்ணகுமார் பாறை பகுதியில் தவித்துக்கொண்டு இருப்பதை கண்டனர். சுமார் 2.30 மணி நேரம் போராடி அவரை பாறை பகுதியில் இருந்து கயிறு கட்டி மீட்டார்கள்.

இதையடுத்து அவரை காலை 9 மணிக்கு மலையில் இருந்து கீழே இறங்கி பத்திரமாக அழைத்து வந்தனர். சுமார் 20 மணி நேரம் மலைப்பகுதியில் தவித்த கிருஷ்ணகுமாரை பத்திரமாக மீட்டு வந்த தீயணைப்புத்துறையினருக்கும், இளைஞர்களுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘‘அலவாய்மலையை சுற்றி பார்க்க சென்றபோது வழி தவறி மதியம் 1 மணியளவில் அங்கிருந்த பாறை பகுதியில் சிக்கி கொண்டேன். அப்போது அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் முறையாக பதில் கூறவில்லை. உடனே எனது நண்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிதேன். இரவு முழுவதும் மலைப்பகுதியில் தவித்த நான் சுமார் 20 மணி நேரத்துக்குப்பின் மீட்கப்பட்டேன்‘‘ என்றார்.


Next Story