போலி பணி நியமன ஆணையை கொடுத்து ஆசிரியர் வேலையில் சேர முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது


போலி பணி நியமன ஆணையை கொடுத்து ஆசிரியர் வேலையில் சேர முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 March 2017 2:00 AM IST (Updated: 29 March 2017 8:43 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி பள்ளியில் போலி பணி நியமன ஆணையை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர முயன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

வந்தவாசி பள்ளியில் போலி பணி நியமன ஆணையை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர முயன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலி நியமன ஆணை கொடுத்து பணியில் சேர்ந்த 3 பேர் சிக்கி உள்ளனர்.

பணி நியமன ஆணை

வந்தவாசி தாலுகா இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 36), எம்.ஏ. மற்றும் பி.எட். படித்துள்ளதாகவும், கடந்த 2014–ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பாடப்பிரிவில் பட்டதாரி பணியிடத்தில் பணியாற்ற முதன்மை கல்வி அலுவலர் கையெழுத்துள்ள பணி நியமன ஆணையை மகேஸ்வரி கொண்டு வந்து பள்ளித் தலைமை ஆசிரியை பானுமதியிடம் வழங்கினார்.

அதனை பெற்ற தலைமை ஆசிரியை பானுமதிக்கு சந்தேகம் எழுந்தது. ஏனெனில் பணிநியமன ஆணையை துணை இயக்குனர் தான் வழங்க முடியும். மாவட்ட அளவில் தர முடியாது. இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பள்ளித் தலைமை ஆசிரியை போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறினார்.

இதைத்தொடர்ந்து மகேஸ்வரி கொடுத்த பணி நியமன ஆணையை ஸ்கேன் செய்து மெயில் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அதனை சரிபார்த்தபோது, பணிநியமன ஆணையும், கையெழுத்தும் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்தார். எனவே இதுபற்றி வந்தவாசி பள்ளி தலைமை ஆசிரியை பானுமதிக்கு தெரிவிக்கப்பட்டது.

பெண் உள்பட 2 பேர் கைது

இதையடுத்து பானுமதி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால், சப்–இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் மகேஸ்வரியிடமும், அவருடன் வந்த அவருடைய தம்பி ராஜசேகர் என்பவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மகேஸ்வரியிடம் இருந்து ரூ.3½ லட்சத்தை ராஜசேகர் பெற்று சக்கரபாணி என்பவரிடம் கொடுத்ததும், அதனைத்தொடர்ந்து போலி நியமன ஆணையை பெற்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மகேஸ்வரி மற்றும் ராஜசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து வந்தவாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு நிலவரசன் உத்தரவிட்டார். இதில் தலைமறைவாக உள்ள சக்கரபாணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் தனது அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்

போலி பணி நியமன ஆணைகளை கொண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் வேறு யாரேனும் இருந்தால் உடனடியாக தாமாகவே முன் வந்து தெரியப்படுத்த வேண்டும். இது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

ஒரு சிலர் ஆசிரியர் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையால் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து இதுபோன்ற போலி பணி நியமன ஆணைகளை கொண்டு முறைகேடாக பணியில் சேர்ந்துள்ளனர். இது போன்று போலியான கும்பலின் ஆசை வார்த்தைகளை கேட்டு ஏமாற வேண்டாம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமன முறையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகிறது. ஆகவே பல துறைகளில் மாணவர்களை நல்ல முறையில் உருவாக்கும் ஆசிரியர்களே இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் 3 பேர் சிக்கி உள்ளனர்

மகேஸ்வரி போன்று வந்தவாசி தாலுகா ஆவணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரியும் முத்துலட்சுமி, செய்யாறு தாலுகா மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் புனிதவதி, ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் விஜயகுமார் ஆகியோர் போலி பணி நியமன ஆணை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவர்களின் பணிநியமன ஆணையை ரத்து செய்து, கைது நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களுக்கு பின்னால் இயங்கும் கும்பலையும் பிடிக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story