சோலார் தகடு இல்லாமல் சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றும் செயற்கை இலை!


சோலார் தகடு இல்லாமல் சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றும் செயற்கை இலை!
x
தினத்தந்தி 30 March 2017 3:00 PM GMT (Updated: 2017-03-30T11:56:30+05:30)

மாற்றம் ஒன்றே மாறாதது. அத்தகைய ஒரு மாற்றம்தான் மனிதனை என்றும் தீராத தாகத்துடன் செயற்கரிய செயல்களை செய்யத் தூண்டி அவற்றில் மிகப்பெரிய வெற்றியும் பெறச்செய்கிறது.

இந்த கூற்று உண்மை என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளது சூரிய ஒளியில் இருந்து முற்றிலும் புதியதொரு முறையில் ஆற்றல் உற்பத்தி செய்யும் புதிய கண்டுபிடிப்பு ஒன்று. எப்படி என்கிறீர்களா?

சூரிய ஒளியில் இருந்து மின் ஆற்றலை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், சோலார் தகடுகள் அவசியம் என்றுதானே நாம் படித்தும், கேள்விப்பட்டும் இருக்கிறோம்? ஆனால், சோலார் தகடுகள் இல்லாமலேயே சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவிலுள்ள இன்டியானா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி லியாங் ஷி லி தலைமையிலான ஆய்வுக்குழு மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள ‘மூலக்கூறு இலை’ (molecular leaf) அல்லது ‘செயற்கை இலை’ என்று அழைக்கப்படும் இலை வடிவக் கருவி இந்த அற்புதத்தை நிகழ்த்துகிறது.

இந்த செயற்கை இலை கருவியானது சூரிய ஒளி அல்லது மின்சாரத்தின் உதவியுடன் உலக வெப்பமயமாதலை ஏற்படுத்தும் கரியமில வாயுவை ஆற்றலாக மாற்றுவதன் மூலமாகவே சோலார் தகடு இல்லாமல் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் உலகத்தை வேகமாக சூடாக்குவதன் மூலம் பூமியிலுள்ள உயிர்வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி தினசரி பலகோடி டன்கள் அளவு அதிகரித்துவரும் கரியமில வாயுவை சுற்றுச்சூழலில் வெற்றிகரமாக குறைக்கும் அல்லது அகற்றும் இதுவரையிலான தொழில்நுட்பங்களிலேயே அதீத செயல்திறன் கொண்டது இந்த செயற்கை இலை கருவிதான் என்று கூறப்படுகிறது.

அது சரி, சூரிய ஒளியின் உதவியுடன் கரியமில வாயு எப்படி ஆற்றலாக மாற்றப்படுகிறது?

முதலில், செயற்கை இலையில் உள்ள கரிய நிறம் கொண்ட நானோ கிராபீன் எனும் அமைப்பு அதீத அளவு சூரிய ஒளியை உறிஞ்சுகிறது. அதனைத் தொடர்ந்து சூரிய ஒளியில் உள்ள ஆற்றல் செயற்கை இலையில் உள்ள ரீனியம் எஞ்சின் எனும் பாகத்தின் உதவியுடன் கரியமில வாயுவை கார்பன் மோனாக்சைடு எனும் ரசாயனமாக மாற்றுகிறது. இப்படி உற்பத்தியாகும் கார்பன் மோனாக்சைடை எரிவாயுவாக பயன்படுத்த முடியும்.

அதாவது, கார்பன் மோனாக்சைடை எரித்தால் அதீத ஆற்றலும் சிறிதளவு கரியமில வாயுவும் உற்பத்தியாகும். இதன்மூலம் உற்பத்தியாகும் கரியமில வாயு சூரிய ஒளியின் உதவியுடன் மீண்டும் கார்பன் மோனாக்சைடாக மாற்றப்படும். இத்தகைய சுழற்சியின் மூலம் ஆற்றலானது தொடர்ச்சியாக உற்பத்தியாகும். அதேசமயம் சுற்றுச்சூழலில் உள்ள கரியமில வாயுவின் அளவும் வெகுவாகக் குறையும் என்பது மகிழ்ச்சியான தகவல் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!

ஆக, சூரிய ஒளியில் இருந்து சோலார் தகடுகள் இல்லாமலேயே ஆற்றலையும் உற்பத்தி செய்து, சுற்றுச்சூழலில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரியமில வாயுவின் மூலம் ஏற்படும் ஆபத்தான பருவநிலை மாற்றத்தையும் குறைக்கும் இந்த செயற்கை இலை தொழில்நுட்பமானது ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல!

Next Story