கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 30 March 2017 8:45 PM GMT (Updated: 2017-03-30T18:28:26+05:30)

நெமிலி அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

வேலூர்

நெமிலி அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

பொதுமக்கள் முற்றுகை

நெமிலி அருகே உள்ள ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கலெக்டர் அலுவலக மேலாளர் பாலகிருஷ்ணன் சென்று விசாரணை நடத்தி, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஓச்சேரி நெடுஞ்சாலை அருகே இருந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது. இந்த நிலையில் ஆயர்பாடியில் இருந்து உத்திரம்பட்டு கிராமத்திற்கு செல்லும் பாதையில் உள்ள விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைவைப்பதற்காக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.

தடுக்க வேண்டும்

இதை அறிந்த நாங்கள் கடைகட்டும் பணியை தடுத்து நிறுத்தினோம். ஆனால் தற்போது அந்த கடையை டாஸ்மாக் அதிகாரிகள் இரவு நேரங்களில் வந்து பார்த்து செல்கிறார்கள். எனவே, அந்த இடத்தில் டாஸ்மாக் கடை வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்தப்பகுதியில் 10–க்கும் மேற்பட்ட கோவில்களும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் உள்ளது. உத்திரம்பட்டு, தச்சன்பட்டரை, ஆலப்பாக்கம், அமராபுரம் ஆகிய கிராம பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ – மாணவிகள் இந்த பாதையைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, இங்கு டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் கலெக்டர் அலுவலக மேலாளர் பாலகிருஷ்ணன், பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story