ஆரணியில் 2 வீடுகளில் நகை – பணம் திருட்டு


ஆரணியில் 2 வீடுகளில் நகை – பணம் திருட்டு
x
தினத்தந்தி 30 March 2017 8:45 PM GMT (Updated: 2017-03-30T19:07:18+05:30)

ஆரணியில் 2 வீடுகளில் நகை – பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி,

ஆரணியில் 2 வீடுகளில் நகை – பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

நகை – பணம் திருட்டு

ஆரணி வி.ஏ.கே.நகர் விளையாட்டு மைதானம் அருகே வசித்து வருபவர் விஜயராகவன் (வயது 62), ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தேவகி, சென்னையில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த தேவகி, வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டிற்குள் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பீரோக்கள் இருக்கும் அறைகளுக்கு சென்று பார்த்தபோது, 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

இதேபோல் ஆரணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர், வேலூர் மாவட்டம் திமிரி ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி. நேற்று முன்தினம் கணவன் – மனைவி இருவரும் அக்ராபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் மாலையில் ஆரணி பள்ளிக்கூட தெருவில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தேவகி, சிவக்குமார் ஆகியோர் தனித்தனியாக ஆரணி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story