ராமநாதபுரத்தில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை


ராமநாதபுரத்தில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-30T21:46:42+05:30)

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம்,

விடுதலைப்போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்த நாளையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து 32 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:–

இந்திய வரலாற்று நூல்களில் 1857–ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம், விடுதலைக்கான முதல் சுதந்திர போராட்டமாக வர்ணிக்கப்படுகிறது. சிப்பாய் கலகம் நடைபெறுவதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் குறிப்பாக அன்றைய காலத்தில் ராமநாதபுரம் சீமையில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டவர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி.

அவர், குழந்தை பருவத்திலேயே ராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பேற்று கொண்டு எண்ணிலடங்காத அறப்பணிகளையும், தமிழ் வளர்ச்சி பணிகளையும் மேற்கொண்டார். உலகப் புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாத சாமி கோவில் மூன்றாம் பிரகாரத்தை கட்டி முடித்தவர். அன்றைய காலக்கட்டத்தில் ராமநாதபுரம் சீமையில் அதிகஅளவிலான கைத்தறி நெசவுக்கூடங்களை நிறுவி, ஆங்கிலேயர்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளை தவிர்த்திட இந்திய மக்களை ஊக்கப்படுத்தியவர். ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்டவேண்டுமென்ற ஆணையினை துச்சமென நினைத்து கப்பம் கட்ட மறுத்தவர்.

சிறை

அவரை கட்டுப்படுத்திட எண்ணி ஆங்கிலேயர் படை ராமநாதபுரம் கோட்டையினை சுற்றி வளைத்து போரிட்டது. இப்போரில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சியிலுள்ள கோட்டையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டுகாலம் சிறையில் கழித்தார். 1782–ம் ஆண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் அவர் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் ராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பேற்றார். சிறிதுகாலம் பொறுமையாக இருந்த மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் உள்ளத்தில் ஊறிய சுதேசி சிந்தனையின் காரணமாக மீண்டும் ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி முடக்கினார்.

அரசு விழா

இதன் காரணமாக 1795–ம் ஆண்டு வெள்ளையர் மற்றும் நவாப்புகளின் கூட்டுப்படை அவரை மீண்டும் கைது செய்து திருச்சி கோட்டையில் சிறை வைத்தனர். திருச்சி சிறையில் சில நாட்கள் அதன்பின்பு சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது வாழ்நாள் இறுதி மூச்சு வரை இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடி 1809–ம் ஆண்டு ஜனவரி 23–ந்தேதி சென்னை ஜா£ஜ் கோட்டையிலேயே உயிர் நீத்தார். அவர் இந்திய தேசத்தின் விடுதலைக்காக செய்த தியாகங்களை கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அவரது பிறந்த நாளான மார்ச் 30–ந்தேதியை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் அருகே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அவருக்கு 8 அடி உயர வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையினை கடந்த ஆண்டு அன்றைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். இந்திய தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட இத்தகைய விடுதலை போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து கவுரவிப்பது நமது கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, சமூக பாதுகாப்பு திட்ட தணித்துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தொழில்மைய மேலாளர் மாரியம்மாள், மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், தாட்கோ மேலாளர் செல்வராஜ் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story