விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு: கட்டண உயர்வு தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை


விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு: கட்டண உயர்வு தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 30 March 2017 11:15 PM GMT (Updated: 30 March 2017 4:49 PM GMT)

கட்டண உயர்வுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால்

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தன்னிச்சையாக பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஸ் கட்டண உயர்வு தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்களை அழைத்து பேச வேண்டும், பேச்சுவார்த்தைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் உடன்படா விட்டால் மாவட்டம் முழுவதும் இன்று(வெள்ளிக்கிழமை) மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்களை அழைத்து பேசுமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரி மணி தலைமையில் அவரது அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன், மாநில நிர்வாகிகள் திருமார்பன், ஸ்ரீதர், செய்தி தொடர்பாளர் புதியவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு நிர்ணயித்த படி

இந்த பேச்சுவார்த்தையில் பஸ் கட்டண உயர்வு தொடர்பாக 10 நாட்களுக்குள் தீர்வு காண்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் உறுதி அளித்தனர். அதுவரை அரசு விதிகளை மீறாமல் பஸ்களை இயக்க ஒப்புக்கொண்டனர். இதனால் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக இருந்த மறியல் போராட்டத்தை ஒத்திவைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் கூறுகையில், கட்டண உயர்வு தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்து சுமூக முடிவு எட்டும் வரை அரசு நிர்ணயித்தபடி பழைய கட்டணத்தையே வசூலிப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர். இதனால் மறியல் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.


Next Story