ஆத்தூர் பகுதியில், காலாவதியான, தரமற்ற ரூ.4½ கோடி மதிப்புள்ள ஜவ்வரிசி மூட்டைகள் பறிமுதல்


ஆத்தூர் பகுதியில், காலாவதியான, தரமற்ற ரூ.4½ கோடி மதிப்புள்ள ஜவ்வரிசி மூட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-30T23:11:29+05:30)

ஆத்தூர் பகுதியில் காலாவதியான, தரமற்ற ரூ.4 கோடியே 52 லட்சம் மதிப்புள்ள ஜவ்வரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் சேகோ ஆலை அதிபர்கள் சிலர் மொத்தமாக ஜவ்வரிசி மூட்டைகளை வாங்கி குடோனில் பதுக்கி வைத்திருப்பதாகவும், காலாவதியான ஜவ்வரிசியை தரமான பொருட்களுடன் கலப்படம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவிற்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து அனுராதா தலைமையிலான அதிகாரிகள் சேகோ ஆலை குடோன்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காலாவதியான ஜவ்வரிசி மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்த குடோன்களில், ஜவ்வரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு குடோன்களுக்கு “சீல்“ வைக்கப்பட்டன. இது தொடர்பாக குடோன் உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் ஜவ்வரிசி மூட்டைகளில் இருந்து மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

9,050 மூட்டைகள் பறிமுதல்

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:–

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், உலிபுரம், சார்வாய்புதூர், புதுப்பேட்டை, அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சேகோ ஆலை குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கடந்த 2016–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும், அந்த மூட்டைகள் காலாவதியாகி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வீரகனூர், உலிபுரம், ஆத்தூர் ஆகிய இடங்களில் இருந்த 3 குடோன்களில் ஜவ்வரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு “சீல்“ வைக்கப்பட்டன. இதில் அம்மாபாளையம் பகுதியில் உள்ள குடோனில் தரமற்ற 1,250 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாதத்தில் நேற்று வரை மொத்தம் 4 குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த காலாவதியான, தரமற்ற 9,050 ஜவ்வரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.4 கோடியே 52 லட்சம் ஆகும். இனிமேல் இதுபோன்று ஜவ்வரிசி மூட்டைகளை வாங்கி, பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story