மாவட்டத்தில் 96 சதவீதம் ஆதார், செல்போன் எண் பதிவு: 3 லட்சம் புதிய ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் தயார் நாளை முதல் வழங்க ஏற்பாடு


மாவட்டத்தில் 96 சதவீதம் ஆதார், செல்போன் எண் பதிவு: 3 லட்சம் புதிய ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் தயார் நாளை முதல் வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 30 March 2017 10:45 PM GMT (Updated: 30 March 2017 5:45 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 96 சதவீத ஆதார், செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் ரே‌ஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ‘ஸ்மார்ட்‘ ரே‌ஷன் கார்டு வழங்கும் பணியில் ஈடுபட உள்ள இ–சேவை மைய கணினி இயக்குபவர்களுக்கு ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் மற்றும் புதிய ரே‌ஷன் கார்டு கேட்டு மனுக்களை பதிவு செய்வது குறித்த பயிற்சி கூட்டம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், துணை பதிவாளர் தர்மலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம.துரைமுருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜய்பாபு மற்றும் இ–சேவை மைய கணினி இயக்குனர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது புதிய ‘ஸ்மார்ட்‘ ரே‌ஷன் கார்டில் திருத்தம் செய்வது தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை இ–சேவை மைய பணியாளர்களுக்கு கலெக்டர் சம்பத் வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் சம்பத் தெரிவித்ததாவது:–

3 லட்சம் ‘ஸ்மார்ட்‘ கார்டுகள் தயார்

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரத்து 382 ரே‌ஷன் கார்டுகள் நடைமுறையில் இருந்து வருகிறது. மொத்தம் 1,541 முழுநேர மற்றும் பகுதி நேர ரே‌ஷன் கடைகள் இயங்கி வருகிறது. ரே‌ஷன்கடை பணியாளர்களால் 8 லட்சத்து 90 ஆயிரத்து 433 ரே‌ஷன் கார்டுகளுக்கு 96 சதவீதம் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரே‌ஷன் கார்டில் பெயர் பதிவு உள்ள நபர்கள் அனைவருக்கும் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய ‘ஸ்மார்ட்‘ ரே‌ஷன் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில், தற்போது 3 லட்சம் புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்க தயாராக உள்ளது. இந்த கார்டுகள் நாளை(சனிக்கிழமை) 1–ந் தேதி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கார்டுகள் அச்சிட்டு வர வர வழங்கப்படும்.

இந்த நிலையில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் மற்றும் புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு கோரி மனு செய்தல் ஆகிய பணிகளுக்காக பொதுமக்கள், tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இ–சேவை மையம்

இந்த முறையிலான திருத்தங்களை பொதுமக்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள சி.எஸ்.சி. சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களால் செயல்பட்டு வரும் அரசு இ–சேவை மையங்கள் மற்றும் ஏனைய இ–சேவை மையங்கள் போன்ற கணினி சேவை மையங்களை பயன்படுத்திகொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் சம்பத் தெரிவித்தார்.


Next Story