கூடலூர் மயான சாலை அருகே மதுபான கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்


கூடலூர் மயான சாலை அருகே மதுபான கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 30 March 2017 6:12 PM GMT)

கூடலூர் மயான சாலை அருகே, மதுபான கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூடலூர்

மதுபான கடைகள்

கூடலூர் நகராட்சியில் மெயின்பஜார் வீதி, காமாட்சியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அரசு மதுபான கடைகள் உள்ளன. இதில் மெயின் பஜார் வீதியில் உள்ள மதுபான கடையை, கூடலூர் 6-வது வார்டுக்கு உட்பட்ட மயானசாலை அருகே இடமாற்றம் செய்வதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் மதுபான கடைக்கான கட்டிடத்தை தேர்வு செய்து, நாளை (சனிக் கிழமை) திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 6-வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் பட்டாளம்மன் கோவில் தெருவில் இருந்து பதாகைகளை ஏந்திய படி பேரணியாக சென்றனர்.

சாலை மறியல்

கூடலூர் பழைய பஸ்நிலையம் அருகே சென்ற அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து மெயின்பஜார் வழியாக கம்பம்-குமுளி நெடுஞ்சாலையில் உள்ள புதிய பஸ்நிலையம் அருகே வந்தனர். திடீரென அவர்கள், பஸ்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜான் பெஞ்சமின் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கம்பம்-குமுளி செல்லும் அனைத்து வாகனங்களும் கூடலூர் வடக்கு காளியம்மன் கோவில் வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், கூடலூர் மயானசாலையில் மதுபான கடை அமைக்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறினர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

Next Story