ஹைவேவிஸ் மலைஅடிவாரத்தில் உள்ள சண்முகாநதி அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


ஹைவேவிஸ் மலைஅடிவாரத்தில் உள்ள சண்முகாநதி அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 March 2017 6:17 PM GMT (Updated: 2017-03-30T23:47:23+05:30)

ஹைவேவிஸ் மலை அடிவாரத்தில் உள்ள சண்முகாநதி அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தமபாளையம்,

சண்முகாநதி அணை

உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் ஹைவேவிஸ்மலை அடிவார பகுதியில் சண்முகநாதர் கோவில் உள்ளது. இந்த பகுதியில், ரூ.14 கோடியே 70 லட்சம் மதிப்பில் 1986-ம் ஆண்டு சண்முகாநதி அணை கட்டப்பட்டது.

இந்த அணையின் மூலம் ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், கன்னிசேர்வைபட்டி, அப்பிபட்டி, புத்தம்பட்டி, எரசக்கநாயக்கனூர், சின்னஓவுலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ராயப்பன்பட்டியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் சண்முகாநதி அணை அமைந்துள்ளது. கண்களை கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை தன்னகத்தே கொண்டதாக அணை விளங்குகிறது.

சுற்றுலா தலமாக்க கோரிக்கை

ஹைவேவிஸ் மலை அடிவாரத்தில் அணை அமைந்திருப்பதால் இதயத்தை வருடும் இதமான தென்றல் காற்று வீசி கொண்டிருக்கிறது. எனவே இந்த அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால விருப்பம் ஆகும். மேலும் அணைப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காலியிடம் உள்ளது.

அதில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும். கலைநயத்துடன் கூடிய சிலைகளை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சண்முகாநதி அணையை சுற்றுலா தலமாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. ஆனால் அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிராகவே உள்ளது.

படகு சவாரி

இதுகுறித்து ராயப்பன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, சண்முகாநதி அணைக்கு கோடைக்காலத்திலும் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு ஏற்றதாக அணை விளங்குகிறது. சுற்றுலா பயணிகள் வந்து செல்ல போதுமான இடவசதி உள்ளது. அணையில் படகு சவாரி செய்து கொடுக்க வேண்டும். சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் அணை அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகள் எளிதில் சென்று வர வாய்ப்பு உள்ளது. எனவே சண்முகாநதி அணையை சுற்றுலா தலமாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
 

Next Story