கோவையில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த வங்கி மேலாளர் மீது போலீசில் புகார்


கோவையில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த வங்கி மேலாளர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 30 March 2017 6:39 PM GMT)

கோவையில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த வங்கி மேலாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

கோவை, 

கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 36). தங்கநகை தொழிலாளியான இவர் நேற்று காலை ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக்கொண்டு அவரது வங்கி கணக்கில் செலுத்த ஒப்பணக்கார வீதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். வங்கியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர் கவுண்ட்டருக்கு சென்று காசாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது 10 ரூபாய் நாணயங்களை காசாளர் வாங்க மறுத்துள்ளார்.

இதனால் வருத்தம் அடைந்த ராஜன், ‘10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனவே 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொள்ளுமாறு‘ கேட்டுக்கொண்டார். ஆனாலும் வங்கி காசாளர் அந்த நாணயங்களை அவரிடமிருந்து வாங்கவில்லை என்று தெரிகிறது. வங்கி மேலாளரிடம் முறையிட்டும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த ராஜன் வங்கி மேலாளர் மீது பெரியகடை வீதி போலீசாரிடம் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அந்த புகாரின் பேரில் போலீசார் ராஜனை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் வங்கிக்கு வந்தனர். 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பது குறித்து வங்கி மேலாளரிடம் போலீசார் கேட்டனர். அப்போது வங்கி மேலாளர் போலீசாரிடம் கூறும்போது, ‘கடந்த 28–ந்தேதி ராஜன் 10 ரூபாய் நாணயங்களுடன் வந்தார். அவரை 2 நாள் கழித்து வருமாறு கூறினோம். விடுமுறைக்கு பின்னர் வந்த ராஜன், நாணயங்களை வாங்கும் அதிகாரிகளை முறையாக அணுகாமல், உடனே போலீசுக்கு சென்றுவிட்டார். மற்றபடி 10 ரூபாய் நாணயங்களை நாங்கள் வாங்க மறுப்பதில்லை‘ என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ராஜனிடம் இருந்த ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களை வங்கி அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

தயக்கம் வேண்டாம்

இதுகுறித்து ராஜன் கூறும்போது, வங்கி அதிகாரிகள் அலைக்கழிக்காமல் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்க மறுப்பு தெரிவிக்க கூடாது என்று தெரிவித்துள்ளது. இதேபோல் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரனும், இதுதொடர்பான அறிக்கை வெளியிட்டு 10 ரூபாய் நாணயங்களை அனைவரும் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எனவே வங்கிகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள் உள்பட அனைவரும் 10 ரூபாய் நாணயங்களை பெறுவதில் எந்தவித தயக்கமும் காட்ட கூடாது என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story