பொள்ளாச்சி தாலுகாவில் 2800 லாரிகள் ஓடவில்லை; ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு தொழிலாளர்கள் வேலை இழப்பு


பொள்ளாச்சி தாலுகாவில் 2800 லாரிகள் ஓடவில்லை; ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு தொழிலாளர்கள் வேலை இழப்பு
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 30 March 2017 6:50 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி தாலுகாவில் 2800 லாரிகள் ஓடாததால் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

பொள்ளாச்சி,

வாகனங்களுக்கான காப்பீடு உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, 15 ஆண்டுகளுக்கு மேலான அனைத்து வாகனங்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்தல், வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதை நீக்க செய்ய வேண்டும். நாள்பட்ட சுங்க சாவடிகளை அகற்றுவது மற்றும் டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியதை கண்டிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தென் இந்திய அளவிலான லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

பொள்ளாச்சி தாலுகாவில் 2800 லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதையடுத்து பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் உள்ள லாரி பேட்டையில் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.இதனால் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வது தடைப்பட்டது. இதனால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்ததால், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் கேரளாவில் இருந்து சிறு வியாபாரிகள் இருசக்கர வாகனங்களில் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதேபோன்று தென்னை நார், இளநீர், தேங்காய் ஏற்றுமதியும் தடைப்பட்டது. லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அதை நம்பி இருந்த டிரைவர்கள், கிளீனர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

மாட்டு சந்தை

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். இங்கிருந்து லாரிகளில் கேரளாவுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படும். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மாடுகள் கேரளாவுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர்.

அவர்கள் சரக்கு ஆட்டோக்களில் மாடுகளை ஏற்றி சென்றனர். லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பொள்ளாச்சி மாட்டு சந்தையில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.30 லட்சம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு

இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெபதாஸ், செயலாளர் சேனாதிபதி ஆகியோர் கூறியதாவது:–

டீசல் மீதான வாட் வரி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். பொள்ளாச்சி தாலுகாவில் 2800 லாரிகள் ஓடவில்லை. இதனால் இந்த தொழிலை நம்பி நேரிடையாகவும், மறைமுகமாகவும் உள்ள டிரைவர்கள் தொழிலாளர்கள் உள்பட சுமார் 6 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்.

மேலும் போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு ரூ.40 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. தென்னை நார், இளநீர், தேங்காய், காய்கறி உள்பட எந்த பொருட்களும் செல்லாததால் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story