‘அன்ன பாக்ய’ திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 கிலோ அரிசி வழங்கும் திட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்


‘அன்ன பாக்ய’ திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 கிலோ அரிசி வழங்கும் திட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 March 2017 10:30 PM GMT (Updated: 30 March 2017 7:21 PM GMT)

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

சித்தராமையா தொடங்கி வைத்தார்

கர்நாடகத்தில் ‘அன்ன பாக்ய‘ திட்டத்தின் கீழ் ரே‌ஷன் கடைகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான குடும்ப அட்டைகளுக்கு ஒருவருக்கு இலவச அரிசி 5 கிலோ வழங்கப்படுகிறது. இந்த இலவச அரிசியை கூடுதலாக 2 கிலோ உயர்த்தி அதாவது ஒருவருக்கு 7 கிலோவாக வழங்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த கூடுதல் அரிசி வழங்கும் திட்ட தொடக்க விழா உணவு மற்றும் பொது வினியோகத்துறை சார்பில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, 5 பயனாளிகளுக்கு தலா 7 கிலோ அரிசி வழங்குவதன் மூலம் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:–

வறட்சியில் சிக்கி தவிக்கிறது

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 1.8 கோடி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான குடும்ப அட்டைகளுக்கு ஒருவருக்கு 5 கிலோ வீதம் இலவச அரிசி வழங்கப்படுகிறது. தற்போது இதை ஒருவருக்கு 7 கிலோவாக உயர்த்தி இருக்கிறோம். இந்த கூடுதல் அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதன் மூலம் 4 கோடி பேர் பயன்பெறுகிறார்கள். கடந்த 6 ஆண்டுகள் காலமாக கர்நாடகம் வறட்சியில் சிக்கி தவிக்கிறது. இதில் தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகள் கடும் வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியான காலக்கட்டத்திலும், கூலித்தொழிலாளர்கள் வேலை தேடி வெளியூர் செல்வது குறைந்துள்ளது.

பசி இல்லாத மாநிலமாக...

பசியால் வாடுபவர்களுக்கு தான் இந்த திட்டத்தின் அருமை தெரியும். வயிறு நிரம்ப உண்ணும் சக்தி உள்ளவர்களுக்கு அன்ன பாக்ய திட்டம் சாதாரணமாக தெரிகிறது. அதனால் அத்தகையவர்கள் இதை குறை கூறுகிறார்கள். இதுபோன்ற விமர்சனத்துக்கு நான் பயப்பட மாட்டேன். கர்நாடகத்தை பசி இல்லாத மாநிலமாக மாற்றுவது எனது குறிக்கோள்.

‘மக்களின் மனம்‘ என்ற நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினோம். அதில் கலந்துகொண்ட மக்கள், ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்குவது போதவில்லை என்று கூறினர். இன்னும் கூடுதலாக அரிசி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று, குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கும் அரிசி 5 கிலோவில் இருந்து 7 கிலோவாக உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தேன்.

கண்காணிப்பு குழுக்கள்

பட்ஜெட்டில் அறிவித்த இந்த திட்டத்தை இன்று (அதாவது நேற்று) தொடங்கி இருப்பது, எங்கள் அரசின் கடமையை வெளிக்காட்டுவதாக உள்ளது. இது மட்டுமின்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரவுள்ளன. அரிசி உள்பட உணவு தானியங்களை வினியோகம் செய்வதும் பெரிய சவாலாக உள்ளது. இதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பயனாளிகள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்.

இந்த கண்காணிப்பு குழுவுக்கு மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் பேரை நியமனம் செய்துள்ளோம். அவர்களுக்கு தங்களின் பணி என்ன என்பது விளக்கி கூறும் பணியும் இந்த விழாவில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நுகர்வோர் ஏமாற்றப்படுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ரே‌ஷன் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

விழாவில் மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ரோ‌ஷன் பெய்க் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story