முதலியார் சேவா சங்க பள்ளியின் புதிய கட்டிடம் முதல்–மந்திரி சித்தராமையா திறந்துவைத்தார்


முதலியார் சேவா சங்க பள்ளியின் புதிய கட்டிடம் முதல்–மந்திரி சித்தராமையா திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 30 March 2017 9:00 PM GMT (Updated: 30 March 2017 7:24 PM GMT)

பெங்களூரு பிரகாஷ் நகர் 6–வது குறுக்குத்தெருவில் முதலியார் சேவா சங்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

பெங்களூரு,

பெங்களூரு பிரகாஷ் நகர் 6–வது குறுக்குத்தெருவில் முதலியார் சேவா சங்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு கல்வெட்டை திறந்தும், குத்துவிளக்கேற்றியும் பள்ளியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:–

முதலியார் சேவா சங்கத்தின் கல்வி சேவை பாராட்டுக்குரியது. அனைவருக்கும் கல்வி கட்டாயம் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. மேலும், அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக ஆர்.டி.இ. சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்விக்காக பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான உயர்கல்வி கிடைக்க வேண்டும். அப்போது தான் சமுதாயம் வளர்ச்சி அடையும். கல்வி நிலையங்கள் தொடங்க 10 ஏக்கர் நிலம் ஒதுக்கும்படி சங்க தலைவர் நரசிம்மன் என்னிடம் கூறினார். இதுதொடர்பாக அவர் பெங்களூரு நகர், புறநகர் மாவட்ட நிர்வாகங்களுக்கு மனு கொடுக்க வேண்டும். அந்த மனுவை அரசு பரிசீலித்து இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், மந்திரி கிருஷ்ணப்பா, பெங்களூரு மாநகராட்சி மேயர் பத்மாவதி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், சுரேஷ் குமார் எம்.எல்.ஏ., முதலியார் சேவா சங்க தலைவர் அ.நரசிம்மன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story