சென்னை நெற்குன்றத்தில் 10–ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை


சென்னை நெற்குன்றத்தில் 10–ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 30 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-31T00:55:27+05:30)

சென்னை நெற்குன்றத்தில் 10–ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்பேடு,

சென்னை நெற்குன்றத்தில் 10–ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உறவினர் கற்பழித்து விட்டதால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது அவர் எழுதிய கடிதம் மூலம் தெரிந்தது.

மாணவி தீக்குளித்து தற்கொலை

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி, அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த மாணவி, திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோயம்பேடு போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கடிதம் சிக்கியது

இந்தநிலையில் தற்கொலை செய்யும் முன்பு மாணவி, உருக்கமாக எழுதிய கடிதம் அவரது வீட்டில் இருந்தது. அதை பார்த்த மாணவியின் தந்தை, அந்த கடிதத்தை போலீசாரிடம் கொடுத்தார். அதில் மாணவி தனது தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மாணவியின் சொந்த அத்தையான சசிகலா, அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மாணவியின் குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சசிகலாவின் கணவர் சரவணன், மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது.

மிரட்டல்

இதை தெரிந்து கொண்ட சசிகலா, ‘‘இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது’’ என்று மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு மாணவி, தனது வீட்டில் உள்ள யாரிடமும் சரிவர பேசாமல் இருந்தார். அவரது நடவடிக்கையில் மாறுதல் ஏற்பட்டதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில்தான் தனது சொந்த அத்தையின் கணவரே, மயக்க மருந்து கொடுத்து தன்னை கற்பழித்து விட்டதால் அதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்த மாணவி, விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது அவர் எழுதிய கடிதம் மூலம் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவு

தற்போது மாணவியின் அத்தை சசிகலா, மாமா சரவணன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து கோயம்பேடு போலீசார், சரவணன் மீது கற்பழிப்பு மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரையும் தேடி வருகின்றனர்.

தலைமறைவான சரவணன், நெற்குன்றம் அழகம்மாள் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் தாளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story