சிக்கமகளூரு அருகே விவசாயியை காட்டு யானை மிதித்து கொன்றது


சிக்கமகளூரு அருகே விவசாயியை காட்டு யானை மிதித்து கொன்றது
x
தினத்தந்தி 30 March 2017 7:52 PM GMT (Updated: 30 March 2017 7:52 PM GMT)

சிக்கமகளூரு அருகே விவசாயியை காட்டு யானை மிதித்து கொன்றது.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு அருகே விவசாயியை காட்டு யானை மிதித்து கொன்றது.

விவசாயியை காட்டு யானை கொன்றது


சிக்கமகளூரு டவுனை சேர்ந்தவர் வாஜித்(வயது 55). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள பிதரஹள்ளி கிராமத்தில் உள்ளது. வாஜித் தனது தோட்டத்தில் தக்காளி செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வாஜித் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று இருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை வெளியேறி வாஜித்தின் தோட்டத்திற்குள் புகுந்து உள்ளது.

காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாஜித் அங்கிருந்து ஓடினார். ஆனாலும் காட்டு யானை அவரை விடாமல் துரத்தி சென்று பிடித்து தும்பிக்கையால் தூக்கி வீசியது. யானை தூக்கி வீசியதில் பலத்த காயம் அடைந்த வாஜித், வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். இதையடுத்து காட்டு யானை வாஜித்தின் வயிற்றில் தனது காலால் ஓங்கி மிதித்தது. இதில் வாஜித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின்னர் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

கிராம மக்கள் கோரிக்கை

இதுகுறித்து அறிந்த அந்தப்பகுதி மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறை உயர் அதிகாரி சந்திரய்யா தலைமையிலான வனத்துறையினரும், சிக்கமகளூரு புறநகர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காட்டு யானை தாக்கி இறந்து கிடந்த வாஜித்தின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து வாஜித்தின் உடலை மீட்டு சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பிதரஹள்ளி கிராம மக்கள், வனத்துறையினரிடம் எங்கள் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இதனால் வீட்டைவிட்டு வெளியே வரவே எங்களுக்கு பயமாக உள்ளது. தொடர் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், விவசாயி வாஜித்தின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story