ஆவடியில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை கணவன், மனைவி கைது


ஆவடியில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை கணவன், மனைவி கைது
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-31T01:45:23+05:30)

ஆவடியில் மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து விட்டு, உடலை கால்வாயில் வீசிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்

ஆவடி,

ஆவடி கன்னிகாபுரம் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் வரதம்மாள் (வயது 70). கணவர் இறந்து விட்டார். 2 மகன்களும், ஒரு மகளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். வரதம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28–ந்தேதியில் இருந்து திடீரென வரதம்மாளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மகன் முரளிதரன், ஆவடி போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கர்ணன், சப்–இன்ஸ்பெக்டர் விமலநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கொலை செய்து பிணம் வீச்சு

இந்தநிலையில், வரதம்மாளின் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு குடியிருந்த பிரபு (25) மற்றும் அவரது மனைவி சுதா (25) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலை இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் வரதம்மாள் அணிந்திருந்த 5 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு, அவரை தனது வீட்டுக்கு வரவழைத்து வாயை பொத்தி கொன்றதாகவும், பின்னர் உடலை சாக்குமூட்டையில் கட்டி வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் வீசியதாகவும் இருவரும் தெரிவித்தனர். கொலை செய்து நகையை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு சென்று விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கணவன், மனைவி கைது

இதனையடுத்து, பிரபுவையும், அவரது மனைவி சுதாவையும் போலீசார் கைது செய்தனர். கைதான பிரபு ஆவடி ரெயில் நிலையம் அருகே பானி பூரி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

Next Story