லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: கரூரில் ரூ.15 லட்சம் வர்த்தகம் பாதிப்பு


லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: கரூரில் ரூ.15 லட்சம் வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 30 March 2017 9:01 PM GMT)

லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியாக கரூரில் ரூ.15 லட்சம் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.

கரூர்,

லாரிகளுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்ட காப்பீட்டு பிரிமீய தொகையை ரத்து செய்ய வேண்டும். லாரிகளுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும். காலாவதியான சாவடிகளை புதுப்பித்து சுங்கவரி வசூல் செய்வதை கைவிட வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை அடிக்கடி உயர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கின. அதன்படி கரூர் மாவட்டத்திலும் நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கின. இது குறித்து கரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜூவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ரூ.15 லட்சம் வர்த்தகம் பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட லாரிகள் நேற்று ஓடவில்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு எடுத்து செல்லவில்லை. மேலும் கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று காய்கறிகள், சிமெண்டு மூட்டைகள், நெல், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று ஒரு நாள் மட்டும் கரூர் மாவட்டத்தில் ரூ.15 லட்சம் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. எனவே மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story