அ.தி.மு.க. பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் சபாநாயகரிடம் ஓம்சக்தி சேகர் மனு


அ.தி.மு.க. பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் சபாநாயகரிடம் ஓம்சக்தி சேகர் மனு
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 30 March 2017 9:02 PM GMT)

புதுச்சேரி சட்டமன்றத்தில் அ.தி.மு.க. பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் சபாநாயகரிடம் ஓம்சக்தி சேகர் மனு

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்தில் அ.தி.மு.க. என்ற பெயரை உபயோகப்படுத்தவும், இரட்டை இலை சின்னத்தைப்பற்றி பேசவும் தடை விதிக்க வேண்டும் என்று பாநாயகர் வைத்திலிங்கத்திடம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மனு கொடுத்தார்.

புதுவை சட்டசபை கூடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு நேற்று காலை சபாநாயகர் வைத்திலிங்கத்தை அவரது அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பெயரை உபயோகப்படுத்த...


ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் தமிழகத்தில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியாகவும், சசிகலா அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் அணி ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சி தலைவி அம்மா’ என்றும், சசிகலா அணி ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அம்மா’ என்றும் கட்சியின் பெயராக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் புதுவை சட்டமன்றத்தில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரினை உபயோகப்படுத்தவும், இரட்டை இலை சின்னத்தைப் பற்றி பேசவும் தடைவிதிக்க வேண்டும்.

தேர்தல் ஆணைய உத்தரவு


சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தாங்கள் பேச அழைக்கும்போதும், வெட்டு பிரேரணை உள்ளிட்ட தீர்மானங்கள் முன்மொழியும்போதும், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அம்மா’ சசிகலா அணி உறுப்பினர்கள் என்று அவர்களை அழைக்க வேண்டும். இத்துடன் தேர்தல் ஆணைய உத்தரவையும் இணைத்துள்ளேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இதற்கிடையே புதுவை சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ‘அ.தி.மு.க. வாழ்க, புரட்சி தலைவியின் புகழ் ஓங்குக’ என்று கோ‌ஷம் எழுப்பியவாறே கூட்ட அரங்கிற்குள் வந்தனர்.


Next Story