யானை தாக்கி முதியவர் சாவு வனப்பகுதியில் விறகு பொறுக்க சென்றபோது பரிதாபம்


யானை தாக்கி முதியவர் சாவு வனப்பகுதியில் விறகு பொறுக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-31T02:32:39+05:30)

அந்தியூர் அருகே வனப்பகுதியில் விறகு பொறுக்க சென்ற முதியவர் யானை தாக்கி இறந்தார்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள ஜர்த்தல் கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி (வயது 75). இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி அதே ஊரில் வசித்து வருகிறார்கள்.

விறகு பொறுக்குவதற்காக சென்னம்பட்டி வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் வையாபுரி சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

தலை நசுங்கிய நிலையில்...


இதைத்தொடர்ந்து வையாபுரியை தேடி அவருடைய உறவினர்கள் சென்னம்பட்டி வனப்பகுதிக்கு நேற்று காலை சென்றனர். அங்குள்ள அமலிக்குட்டை என்ற பகுதியில் தலை நசுங்கிய நிலையில் அவர் இறந்து கிடந்ததை கண்டதும் அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனவிலங்கு தாக்கி வையாபுரி இறந்திருக்கலாம் என்று நினைத்த அவர்கள் உடனே இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கும், பர்கூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் வனச்சரகர் முருகேசன், பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வையாபுரியின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ரூ.25 ஆயிரம்


அப்போது, ‘வனப்பகுதியில் வையாபுரி, விறகு பொறுக்கி கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த யானை, அவரை தூக்கி வீசியதுடன், தன்னுடைய காலால் அவருடைய தலையில் மிதித்து உள்ளது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது,’ வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வையாபுரியின் உடலை போலீசார் கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யானை தாக்கி வையாபுரி இறந்ததால் அவருடைய ஈமச்சடங்குக்காக வனத்துறை சார்பில் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.


Next Story