கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் 1,433 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை


கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் 1,433 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை
x
தினத்தந்தி 30 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-31T02:34:26+05:30)

கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் 1,433 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்று வருகிறது.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு வட்டவிளை பத்திரகாளியம்மன் கோவிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கடந்த 21–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

4–ம் திருவிழாவன்று தூக்க நேர்ச்சை பதிவு மற்றும் தூக்கநேர்ச்சை குலுக்கல் நடந்தது. இதில் நேர்ச்சை நிறைவேற்ற 1,433 குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டது. 9–ம் திருவிழாவன்று வண்டியோட்டம் நடந்தது.

தூக்க நேர்ச்சை

நேற்று காலை 7 மணி முதல் வரலாற்று சிறப்பு மிக்க தூக்கத்திருவிழா தொடங்கியது. முதலில் தூக்கநேர்ச்சைக்காரர்கள் இல்லாமல் தூக்கக்காரர்களுடன் அம்மன் தூக்கம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை நிறைவேற்றுவது நடந்தது. ஒரு தூக்க வண்டியில் ஒரே நேரத்தில் 4 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. நேற்று காலை 9 மணிக்கு தூக்கக்காரர்கள் இடைவிளாகம் தறவாட்டில் இருந்து வாள் மற்றும் பரிசு பெற்றுக்கொண்டு மேளதாளம்முழங்க அணிவகுத்து கோவிலுக்கு வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1,433 குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தூக்க நேர்ச்சை இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு முடிவடையும். நேர்ச்சை முடிவில் அம்மன் ஊர்வலமாக வட்டவிளை கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.

சிறப்பு பஸ்கள்

தூக்கத்திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கொல்லங்கோடு பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருந்தது.

தூக்கத்திருவிழாவையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கொல்லங்கோடுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story