பாதாள சாக்கடை பணியால் நாகர்கோவிலில் ‘கடும்’ போக்குவரத்து நெரிசல்


பாதாள சாக்கடை பணியால் நாகர்கோவிலில் ‘கடும்’ போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-31T02:34:27+05:30)

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நேற்று ‘கடும்’ போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பெரும்பாலான சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டன. இதன் காரணமாக சாலைகள் குண்டும்– குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நகரின் பிரதான சாலையான கேப் ரோட்டில், கோட்டார் ஆயுர் வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து சவேரியார் ஆலய சந்திப்பு வரை பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளால் அந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்றும் அந்த சாலையில் பணி நடந்தது. இதன் காரணமாக நேற்று அங்கு ‘கடும்’ போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்கள்  அணி வகுத்து நின்றன

இதனால் வாகனங்கள், சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து வடசேரி வரை அணி வகுத்து நின்றன. பின்னர் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றன.

அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் சவேரியார் ஆலய சந்திப்பு வர சுமார் 15 நிமிடங்கள் ஆனது. நகரின் முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அந்த சாலையில் வந்து இணையும் மற்ற சாலைகளிலும் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

அந்த வகையில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு சந்திப்புக்கு வரும் சாலை, கணேசபுரம் சாலை, செட்டிதெரு, டென்னிசன் சாலை, தலைமை தபால் நிலையம் முன் உள்ள சாலை என அனைத்து இடங்களிலும் வாகனங்கள் நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஆங்காங்கே போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் தீர்வு ஏற்பட்டபாடில்லை.

காலை 10 மணிக்கு ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசல் மதியம் 2 மணி வரை இருந்தது. அதற்கு பிறகு சற்று குறைந்தது.


Next Story