‘ஆட்சியில் நீடிக்க தந்திரம் செய்வதை பா.ஜனதா நிறுத்தி கொள்ள வேண்டும்’ சிவசேனா சொல்கிறது


‘ஆட்சியில் நீடிக்க தந்திரம் செய்வதை பா.ஜனதா நிறுத்தி கொள்ள வேண்டும்’ சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 30 March 2017 10:09 PM GMT (Updated: 2017-03-31T03:38:44+05:30)

ஆட்சியில் நீடிக்க தந்திரம் செய்வதை நிறுத்தி விட்டு, விவசாயிகள் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள் என்று பா.ஜனதாவை சிவசேனா கேட்டுக் கொண்டு உள்ளது.

மும்பை,

ஆட்சியில் நீடிக்க தந்திரம் செய்வதை நிறுத்தி விட்டு, விவசாயிகள் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள் என்று பா.ஜனதாவை சிவசேனா கேட்டுக் கொண்டு உள்ளது.

உயர்மட்ட குழு கூட்டம்

மராட்டியத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா– சிவசேனா இடையே பனிப்போர் தொடர்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜனதா மாநில உயர்மட்ட கூட்டம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில், அடிக்கடி தொல்லை கொடுக்கும் சிவசேனாவை கழற்றி விட்டு, ஆட்சியில் தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இது சிவசேனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:–

தந்திரம் வேண்டாம்

மாநிலம் முழுவதும் விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். அவர்களது கடனை தள்ளுபடி செய்ய ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இந்த பணத்தை எப்படி திரட்ட வேண்டும் என்பது பற்றி பா.ஜனதா சிந்திக்க வேண்டும். மாறாக அவர்கள் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திப்பது எப்படி? என்பது பற்றி அவர்களது கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆலோசித்ததாக தெரிகிறது. மேலும் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக 20 முதல் 25 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அவர்கள் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் உத்தியில் ஈடுபட வேண்டாம். ஆட்சியில் நீடிக்க தந்திரம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

எந்த விலை கொடுத்தாவது தேவேந்திர பட்னாவிஸ் அரசு ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் உள்ளது. அதை விட்டு விட்டு விவசாயிகளை பற்றி சிந்திப்பது சாலச்சிறந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story