புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காரைக்குடியில் மக்கள் மன்றத்தினர் நூதன போராட்டம்
புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காரைக்குடியில் மக்கள் மன்றத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி,
நூதன போராட்டம்புதுடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றக்கோரியும், தமிழகத்துக்கு போதுமான வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் காரைக்குடி மக்கள் மன்றத்தின் சார்பில் காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே நூதன போராட்டம் நடைபெற்றது.
வறட்சியால் விவசாயிகள் பலர் தமிழகத்தில் இறந்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில், ஒருவர் இறந்து போனது போன்று நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார். அவரது வாயில் துணி கட்டப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு கையில் மண்சட்டியை ஏந்திக்கொண்டு இருந்தனர். போராட்டத்தின் போது ஒப்பாரி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்ஆண்களில் சிலர் மேல் சட்டை அணியாமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தியபடி இருந்தனர். இந்த போராட்டத்துக்கு காரைக்குடி மக்கள் மன்ற தலைவர் ராஜகுமார் தலைமை தாங்கினார். செலயாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அரங்கசாமி, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம், திராவிட விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த பெரியார்முத்து, தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி மலையரசன், மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சகுபர்சாதிக், நகர செயலாளர் காரை பஷீர், பச்சைத்தமிழகம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் தமிழ் கார்த்தி, காரைக்குடி மக்கள் மன்ற பொருளாளர் அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.