செயற்கைகோள் வரைபடம் மூலம் கண்டுபிடித்து அனுமதி இல்லாமல் செயல்பட்ட 3 மணல் குவாரிகளுக்கு சீல் வைப்பு


செயற்கைகோள் வரைபடம் மூலம் கண்டுபிடித்து அனுமதி இல்லாமல் செயல்பட்ட 3 மணல் குவாரிகளுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 31 March 2017 6:47 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் தாலுகாவில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 3 மணல் குவாரிகள் செயற்கைகோள் வரைபடம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

பரமக்குடி,

முதுகுளத்தூர் தாலுகாவில் கண்டிலான், பூக்குளம், குமாரகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் குண்டாறு படுகையில் அரசு அனுமதி இல்லாமல் குவாரி நடத்தி சட்டவிரோதமாக 500–க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர்களில் தினமும் மணல் அள்ளிச்செல்வதாக சம்பந்தப்பட்ட வருவாய்துறை,பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசாருக்கு அப்பகுதி கிராம மக்கள் தகவல் தெரிவித்து புகார் செய்து வந்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்காததால் பரமக்குடி சப்–கலெக்டர் சமீரனிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்.இதைத்தொடர்ந்து சப்–கலெக்டர் சமீரன் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து கண்காணித்து வந்தனர். அப்போது கிராம மக்கள் புகார் தெரிவித்த இடங்களுக்கு சென்றபோது சாலை சேதப்படுத்தப்பட்டும் பாதை இல்லாமலும், சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருந்தது. இதற்குள் சென்று பார்த்தபோது மணல் குவாரியை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சப்–கலெக்டர், செயற்கைக்கோள் வரைபடம் மூலம் அந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் பொதுமக்கள் புகார் தெரிவித்த பட்டா இடங்களில் சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் மணல் அள்ளப்பட்டது துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சப்–கலெக்டர் சமீரன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று முட்புதருக்குள் குவாரி செயல்பட்ட இடத்தை கண்டுபிடித்தார். ஆனால் அதிகாரிகள் வருவதை அறிந்து குவாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அங்கு ஆய்வு செய்தபோது அள்ளிச்செல்ல தயார் நிலையில் 3,100 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த மணலையும், குவாரியில் இருந்த 1,200 யூனிட் மணலையும் சப்–கலெக்டர் பறிமுதல் செய்தார்.

தற்காலிக பணிநீக்கம்

இதுதொடர்பாக தவறுகள் நடந்ததை அறிந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததால் கண்டிலான் கிராம நிர்வாக அதிகாரி முருகன், கிராம உதவியாளர் வேதமணி ஆகிய 2 பேரையும் சப்–கலெக்டர் தற்காலிக பணி நீக்கம் செய்தார். மேலும் சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் மணல் அள்ளியதாக இளஞ்செம்பூர் வருவாய் அதிகாரி வேலவன் அளித்த புகாரின் பேரில் இளஞ்செம்பூர் முன்னாள் ஊராட்சி தலைவர் மயிலேறிவேலன், வடக்கூரை சேர்ந்த வைணவபெருமாள், காமராஜ் நகரை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் ஆகியோர் மீது முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்திலும், குமாரக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராமையா கொடுத்த புகாரின் பேரில் குமாரக்குறிச்சியை சேர்ந்த ஆறுமும் மீது இளஞ்செம்பூர் போலீஸ் நிலையத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பரமக்குடி சப்–கலெக்டர் சமீரன் தினந்தந்தி நிருபரிடம் கூறியதாவது:– கனிம வளம் சுரண்டப்படுவது வேதனைக்குரியது. முதுகுளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சவடுமண் எடுப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டு முறைகேடாக குவாரி நடத்தி மணல் அள்ளிவந்துள்ளனர். அதை செயற்கைகோள் வரைபடம் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முதுகுளத்தூர் அருகே கண்டிலான், பூக்குளம், குமாரக்குறிச்சி ஆகிய 3 பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்து குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. 4,300 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பதிவு ரத்து

அனுமதியின்றி மணல் அள்ளியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் வசூல் செய்யப்படும். எவ்வளவு மணல் அனுமதியின்றி அள்ளப்பட்டு உள்ளது. எவ்வளவு ரூபாய் இழப்பு என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இழப்பீடு, அபராத தொகையை குற்றவாளிகள் செலுத்தாவிட்டால் வருவாய் வசூல் சட்டப்படி அவர்களுடைய சொத்துக்குள் ஜப்தி செய்யப்படும். மேலும் அவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஒப்பந்ததாரராக பதிவு செய்திருந்தால் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மதுரைவீரன் கூறியதாவது:– கமுதி,முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளுக்கு குண்டாறு தான் நீராதாரமாக விளங்கிவருகிறது. இந்த ஆற்றை சுற்றிலும் 46 கிலோமீட்டர் சுற்றளவுக்கு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதை பயன்படுத்தி உரிய அனுமதி இல்லாமல் மணல் அள்ளப்படுகிறது. இதனால் தான் குடிநீர் ஆதாரம் குறைந்து கடும் வறட்சி நிலவிவருகிறது. சவடுமண் அள்ள அனுமதி பெற்று மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு உதவியாக உள்ள வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் மணலை விற்பனை செய்ய ஏல நடை சீட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளால் வழங்கப்படும். இந்த ஏல முறை நடை சீட்டை பயன்படுத்தி முறைகேடாக நூதன முறையில் ஆற்றுப்படுகைகள் உள்ளிட்ட இடங்களில் உரிய அனுமதியில்லாமல் நாள்தோறும் 1000–ம் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதே நடைமுறையில் உரிய அனுமதி பெறாமல் குவாரியும் நடத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

பாதுகாக்க வேண்டும்

இவ்வாறு மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் நூதன முறையில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மணல் அதிகம் அள்ளப்படும் இடங்களுக்கு அதிகாரிகள் தாங்களாகவே போட்டிபோட்டு பணிமாறுதல் பெற்றும் வருகின்றனர். இது மிகவும் வேதனைக்கு உரியது. முறையாக அனுமதிபெறாமல் நூதனமுறையில் செயல்படும் குவாரிகளுக்கு சீல் வைக்க முதல்–அமைச்சர், பசுமை தீர்ப்பாய அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story