மாவட்டத்தில் 1.32 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் சம்பத் தகவல்


மாவட்டத்தில் 1.32 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் சம்பத் தகவல்
x
தினத்தந்தி 1 April 2017 4:45 AM IST (Updated: 31 March 2017 7:03 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணநிதி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சம்பத் தெரிவித்தார்.

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

அவர்கள் பேசும்போது, ‘ஏரிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது கனிமவளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா? என்பதை கலெக்டர் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஏரிகளில் வண்டல்மண் எடுப்பதற்கு கனிமவளத்துறையின் அனுமதி பெறவேண்டும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் பாதுகாத்துகொள்ள கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே ஏரிகளில் எந்தவித நிபந்தனையின்றி வண்டல்மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கவேண்டும்‘ என்றனர்.

வாக்குவாதம்

இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் நடைமுறை சிக்கல் உள்ளது. உடனடியாக எந்த முடிவும் எடுக்கமுடியாது என்றனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே தங்களிடையே இருக்கும் ஆதாரங்களை கனிமவளத்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் காண்பித்தனர். அப்போது விவசாயிகள் தங்களிடம் இருக்கும் கோர்ட்டு உத்தரவு நகல்களை காண்பித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விவசாயிகள் பேசும்போது, ‘வறட்சியை கருத்தில்கொண்டு கிணறுகளை தூர்வார வேண்டும். விவசாயிகளையும், பெண்களையும் தரக்குறைவாக பேசும் புத்தூர் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலரை பணி இடைநீக்கம் செய்யவேண்டும். விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும். தென்னை மரங்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும்‘ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

வறட்சி நிவாரண நிதி

இதற்கு கலெக்டர் சம்பத் பதில்அளித்து பேசும்பொது, ‘சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வறட்சி நிவாரணநிதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் கணக்கிடப்பட்டது. மேலும் இந்த கணக்கெடுப்பின்போது, பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயியும் விடுபடகூடாது என்று அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டன. அதன்படி மாவட்டத்தில் 1,41,000 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி கிடைக்க கணக்கிடப்பட்டது.

தற்போது 9 ஆயிரம் விவசாயிகளை தவிர மற்ற 1 லட்சத்து 32 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணநிதி வழங்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு எண் உள்பட சிலவற்றில் குளறுபடி இருப்பதால் 9 ஆயிரம் பேருக்கு வறட்சி நிவாரணநிதி வழங்கப்படவில்லை. விவசாயிகள் மற்றும் பெண்களை தரகுறைவாக பேசுவதாக கூறப்படும் கிராம நிர்வாக அலுவலர் மீது விசாரணை நடத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சேலம் அருகே வி.மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த ரத்தினவேல் என்ற விவசாயி தன்னுடைய தோட்டத்தில் பயிரிட்டு காய்ந்துபோன கரும்பு பயிர்களை கொண்டுவந்து கலெக்டரிடம் காண்பித்து வறட்சி நிவாரணநிதி கேட்டார்.


Next Story