மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ பெறும் இடம் குறித்து செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும் கலெக்டர் அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘‘ஸ்மார்ட் கார்டு‘ பெறும் இடம் குறித்து செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும் என கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
‘ஸ்மார்ட் கார்டு‘தமிழ்நாடு முழுவதும் ‘ஸ்மார்ட் கார்டு‘ இன்று (சனிக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ‘ஸ்மார்ட் கார்டுகள்‘ இன்று முதல் வழங்கப்பட உள்ளன. புதிய ‘ஸ்மார்ட் கார்டு‘ பெற பொதுமக்கள் அவசரப்பட தேவையில்லை. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் தங்களது செல்போன் எண்களை விற்பனை எந்திரத்தில் பதிவு செய்துள்ளதால், ‘ஸ்மார்ட் கார்டு‘ தயாரானதும், அவர்களது செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்படும்.
அதில் ‘ஸ்மார்ட் கார்டை‘ எந்த தேதியில், எங்கு சென்று பெற வேண்டும் என்ற குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வரும். அதன் பிறகு அந்த இடத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். வராதவர்களுக்கு இன்னும் ‘ஸ்மார்ட் கார்டு‘ பிரிண்ட் ஆகவில்லை என்று பொருளாகும்.
தயாரிக்கும் பணி‘ஸ்மார்ட் கார்டு‘ தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், அது கிடைக்கும் வரை பழைய ரேஷன் கார்டுகளை இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘ஸ்மார்ட் கார்டில்‘ திருத்தம் மேற்கொள்ள இ–சேவை மையத்திற்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம். எனவே, ‘ஸ்மார்ட் கார்டு‘ கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பதற்றப்பட வேண்டாம். கார்டு தயாரானதும் செல்போன் எண்ணிற்கு கண்டிப்பாக குறுந்தகவல் வரும். அதன் பிறகு ‘ஸ்மார்ட் கார்டு‘ பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.