2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மாவட்டம் முழுவதும் நாளை வழங்கப்படுகிறது


2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மாவட்டம் முழுவதும் நாளை வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 1 April 2017 4:15 AM IST (Updated: 31 March 2017 8:43 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நாளை வழங்கப்படுகிறது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நாளையும்(ஞாயிற்றுக்கிழமை), 30–ந்தேதியும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் ராஜேஷ் கடலூரில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணைஇயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–

சொட்டு மருந்து முகாம்

போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயினை தடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணிகள் இருகட்டங்களாக வருகிற 2 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள், புதிதாக உருவான காலனிகள் போன்ற இடங்களில் 1613 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

2½ லட்சம் குழந்தைகள்

இந்த மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 48 ஆயிரத்து 286 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது. இந்த பணியில் பல்வேறு துறைகளை சார்ந்த 6 ஆயிரத்து 452 பணியாளர்களும், 209 மேற்பார்வையாளர்களும் ஈடுபட உள்ளனர். இப்பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் 10 சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பணிகளுக்காக நடமாடும் குழுக்கள் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், மக்கள் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் இரண்டு நாட்களில் அவர்களின் வீடுகளுக்கே சென்று சொட்டு மருந்து புகட்டப்படும்.

எனவே போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் 2 மற்றும் 30–ந்தேதியன்று தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஏற்கனவே சொட்டு மருந்து புகட்டப்பட்டு இருப்பினும் முகாம்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து புகட்டி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் ராஜேஷ் கூறி உள்ளார்.


Next Story