தடுப்பு திட்டத்தில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றால் காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் கலெக்டர் அண்ணாதுரை பேச்சு


தடுப்பு திட்டத்தில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றால் காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் கலெக்டர் அண்ணாதுரை பேச்சு
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 31 March 2017 10:46 PM IST)
t-max-icont-min-icon

காசநோய் தடுப்பு திட்டத்தில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றால் காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும்

தஞ்சாவூர்,

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் உலக காசநோய் தின விழா நேற்று நடைபெற்றது. காசநோய் மைய மருத்துவ அலுவலர் திருமுருகன் வரவேற்றார். காசநோய் துணை இயக்குனர் சந்திரசேகர் திட்ட விளக்க உரை ஆற்றினார். சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியஜெயசேகர் முன்னிலை வகித்தார்.

விழாவிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

எந்த நோயாக இருந்தாலும், அதனை தடுக்கும் முறைகளையும், தகுந்த உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் காசநோய் தடுப்பு திட்டத்தில் சமுதாய நலனில் அக்கறை உள்ள அனைவரும் தாமாக முன்வந்து ஆர்வமுடன் பங்கேற்றால் காச நோய் இல்லாத சமுதாயத்தை விரைவில் உருவாக்க முடியும்.

தொடர் சிகிச்சை

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு காசநோய் மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக 12 லட்சத்து 62 ஆயிரத்து 722 பேர் வந்தனர். இதில் 32 ஆயிரத்து 920 பேருக்கு சளி பரிசோதனை செய்ததில் 2 ஆயிரத்து 219 பேருக்கு காசநோய் கிருமி உள்ளது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 ஆயிரத்து 722 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டதில் 153 பேர்களுக்கு காசநோய் மற்றும் எச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட முற்றிய காசநோயாளிகளுக்கு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள டாட்ஸ் ப்ளஸ் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்காக அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உலக காச நோய் தினத்தன்று ஒவ்வொருவரும் காசநோய் தடுப்பு பணியில் நாம் ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் காசநோய் தினத்தையொட்டி நடந்த கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற நர்சிங் மாணவிகளுக்கு சான்றிதழ்களை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

இதில் துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஞானசெல்வம், மருத்துவ அலுவலர் டாக்டர் உஷாதேவி, குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் சந்திரசேகரன், மாரியப்பன், டாக்டர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.


Next Story