சோனியாகாந்தி பற்றி விமர்சனம்: எச்.ராஜா உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சோனியாகாந்தி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த எச்.ராஜா உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
செஞ்சி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து செஞ்சி கூட்டுசாலையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்புக்குழு உறுப்பினர் வக்கீல் ரங்கபூபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள், எச்.ராஜாவிற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு அவரது உருவபொம்மையை தீவைத்து எரித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆரணி பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் தினகரன், மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், வட்டார தலைவர்கள் சரவணன், முருகன், நகர தலைவர் சரசரவணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் முருகானந்தம், வக்கீல் தனஞ்செழியன், நிர்வாகிகள் ராஜா, மாரியப்பன், ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது எச்.ராஜா உருவ படத்தை தீவைத்து எரிக்க முயற்சி செய்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று கட்சி நிர்வாகிகளிடம் இருந்த எச்.ராஜா உருவ படத்தை கைப்பற்றி கொண்டு சென்றனர். இருப்பினும் ஒரு சிலர் வேறு ஒரு படத்தை கொண்டு வந்து, அதை அவமதிப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள், சோனியாகாந்தி பற்றி தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மீது பா.ஜ.க. தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.