கோவில்பட்டியில் பரிதாபம் பங்குசந்தை வர்த்தக நிறுவனத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கோவில்பட்டியில் பங்குச்சந்தை வர்த்தக நிறுவனத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் பங்குச்சந்தை வர்த்தக நிறுவனத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது. தற்கொலைக்கான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
மில் தொழிலாளிநெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 46), மில் தொழிலாளி. இவருடைய மனைவி திருச்செல்வி (42). இவர்களுக்கு அபிநயசெல்வி (14), பிரியதர்ஷினி (9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் ராமகிருஷ்ணன் லட்சக்கணக்கான ரூபாயை பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்து இருந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலைநேற்று காலையில் ராமகிருஷ்ணன் கோவில்பட்டியில் பணத்தை முதலீடு செய்து இருந்த தனியார் பங்குச்சந்தை நிறுவனத்துக்கு சென்றார். அங்குள்ள ஊழியர்களிடம் சாப்பாடு கொண்டு வந்துள்ளேன். எங்கு அமர்ந்து சாப்பிடுவது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ஓய்வறைக்கு சென்று சாப்பிடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. உடனே ஓய்வறைக்கு சென்ற ராமகிருஷ்ணன் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். பின்னர் அவர் மின் விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாகியும் ராமகிருஷ்ணன் கதவை திறக்காததால் அந்த நிறுவன ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். கதவை தட்டிப்பார்த்தனர். அறைக்குள் இருந்து எந்த பதிலும் இல்லை. உடனே கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்– இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஓய்வறை கதவை உடைத்து திறந்தனர். அப்போது ராமகிருஷ்ணன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான கடிதம் சிக்கியதுஇதற்கிடையே தற்கொலை செய்வதற்கு முன்பாக ராமகிருஷ்ணன் அந்த அறையில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், நான் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிக அளவு பணத்தை இழந்து விட்டேன். இதனால் என்னுடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது. இதேபோன்று யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக, நான் பணத்தை இழந்த அதே நிறுவனத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பங்குச்சந்தை வர்த்தக நிறுவனத்தில் மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.