பெரியகுளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை


பெரியகுளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 1 April 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு நேற்று பா.ஜ.க.வின் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் அந்த கட்சியினர் ஏராளமானோர் வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த பெரியகுளம் தாசில்தார் ராணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த அலுவலகத்தில் ஆய்வாளராக உள்ள பாண்டியிடம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.

அதிகாரிகள் சமரசம்

ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை அவர் எடுக்கவில்லை. இது குறித்து முதியோர்கள் அவரிடம் கேட்ட போது, ஓய்வூதிய தொகை கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு பணம் தரவேண்டும் என பாண்டி கூறியதாக முதியவர்கள் எங்களிடம் புகார் தெரிவித்தனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து பேசிய அதிகாரிகள், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த முதியவர்களுக்கு விரைவில் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆய்வாளர் பாண்டி மீதான புகார் குறித்தும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பா.ஜ.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story