லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நீலகிரியில் 400 டன் காய்கறிகள் தேக்கம்


லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நீலகிரியில் 400 டன் காய்கறிகள் தேக்கம்
x
தினத்தந்தி 1 April 2017 4:45 AM IST (Updated: 1 April 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 400 டன் காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

இன்சூரன்சு பிரிமியம் தொகை உயர்வு, தமிழகத்தில் வாட் வரியால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதன்படி நீலகிரியில் நேற்றுமுன்தினம் முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் நீலகிரியில் விளையும் காய்கறிகள் பெருமளவு தேக்கம் அடைந்து உள்ளது. மேலும் பல லட்சம் கிலோ தேயிலை தூளையும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

400 டன் காய்கறிகள்

இதுகுறித்து நீலகிரி உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:– நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் 1,200 லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் 100 லாரிகள் காய்கறிகளை கொண்டு செல்வதற்காக பயன்படுகிறது. லாரிகள் முற்றிலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400 டன் காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளது. இதன்காரணமாக விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை விரைவில் முடிவிற்கு கொண்டு வர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story