சர்வதேச தரத்தில் அரசு பொருளாதார கல்லூரி தொடக்க விழா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெங்களூரு வருகை


சர்வதேச தரத்தில் அரசு பொருளாதார கல்லூரி தொடக்க விழா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெங்களூரு வருகை
x
தினத்தந்தி 1 April 2017 3:00 AM IST (Updated: 1 April 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் சர்வதேச தரத்தில் அரசு பொருளாதார கல்லூரி அமைக்கப்படுகிறது. 14-ந் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பெங்களூரு,

கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் சர்வதேச தரத்தில் அரசு பொருளாதார கல்லூரி அமைக்கப்படுகிறது. 14-ந் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கர்நாடக அரசின் உயர்கல்வித்துறை மந்திரி பசவராஜ் ராயரெட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சிலிக்கான் பள்ளத்தாக்கு


“உலக பொருளாதார நடவடிக்கைகளில் பெங்களூரு முன்னணி நகரமாக விளங்குகிறது. மென்பொருள் உற்பத்தியில் பெங்களூரு முன்னணி இடத்தில் உள்ளது. அதனால் இந்த நகர் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அறிவுசார் தலைநகரமாக கர்நாடகம் விளங்குகிறது. கல்வி தலைநகரமாகவும் பெங்களூரு திகழ்கிறது.

இந்த சூழ்நிலையில் சர்வதேச தரத்தில் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாகம் குறித்த கல்வி நிறுவனம் பெங்களூருவில் தொடங்க வேண்டியது கட்டாயமாகிறது. சமூக அறிவியலில் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டியது அவசியம். இந்த நோக்கத்தில் “டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ்” என்ற பெயரில் அரசு பொருளாதார கல்லூரியை தொடங்க முடிவு செய்துள்ளோம்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

பெங்களூரு ஞானபாரதியில் 43.45 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கல்லூரி வளாகம் அமைகிறது. இந்த கல்லூரி வருகிற 2017-18-ம் ஆண்டு கல்வி ஆண்டில் செயல்படத்தொடங்கும். இந்த கல்லூரி தொடக்க விழா மற்றும் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா வருகிற 14-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு புதிய பொருளாதார கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த கல்லூரிக்கு தேவையான கட்டிடங்களை கட்டுவதற்கு மாநில அரசு முதல் கட்டமாக ரூ.150 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் நிர்வாக அலுவலகம், மாணவர்கள் தங்கும் கட்டிடம், அருங்காட்சியகம், 3 மாநாட்டு அரங்குகள், ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதிகள், ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு தங்கும் வசதி, நூலகம், பொழுதுப்போக்கு வசதிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்படும்.

லண்டன் பொருளாதார கல்லூரி

இந்த கல்லூரியை அமைப்பதற்காக லண்டன் பொருளாதார கல்லூரியின் ஆலோசனையை நாங்கள் கேட்டுள்ளோம். அவர்கள் பெங்களூரு வந்து கல்லூரி அமையும் பகுதியை பார்வையிட்டு சென்றுள்ளனர். தேவையான உதவிகளை செய்வதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். சர்வதேச தரத்தில் இந்த கல்லூரியை நடத்த வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த பொருளாதார கல்லூரிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

பாடத்திட்டம் மற்றும் ஆட்சி மன்றத்தை தீர்மானிக்க பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. அம்பேத்கர் சட்ட மேதை மட்டுமின்றி, பொருளாதார நிபுணராகவும் இருந்தார். அவருடைய சேவையை போற்றும் விதமாக இந்த பொருளாதார கல்லூரிக்கு அம்பேத்கர் பெயரை சூட்டியுள்ளோம்.

ஆராய்ச்சி பணிகள்


இந்த பொருளாதார கல்லூரியில் சமூக அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் போதனையில் நவீன முறைகள் எடுத்துக்கொள்ளப்படும். இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து இந்த கல்லூரி ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும். இந்த கல்லூரியில் 100 சதவீதம் உள்ளூர் மாணவர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும். வருகிற கல்வி ஆண்டில் உயர்கல்வியில் படிக்கும் 1½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.”

இவ்வாறு மந்திரி பசவராஜ் ராயரெட்டி கூறினார்.

Next Story