பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து; 2 பேர் உடல் கருகி சாவு மாணவர்கள் உள்பட 10 பேர் மீட்பு


பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து; 2 பேர் உடல் கருகி சாவு மாணவர்கள் உள்பட 10 பேர் மீட்பு
x
தினத்தந்தி 1 April 2017 3:00 AM IST (Updated: 1 April 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உடல் கருகி பரிதாபமாக செத்தார்கள். மாணவர்கள் உள்பட 10 பேர் மீட்கப்பட்டார்கள்.

பெங்களூரு,

பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உடல் கருகி பரிதாபமாக செத்தார்கள். மாணவர்கள் உள்பட 10 பேர் மீட்கப்பட்டார்கள்.

தொழிற்சாலையில் தீ

பெங்களூரு ஜே.ஜே.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பழைய குட்டதஹள்ளி அருகே வினாயகநகர் 2–வது கிராசில் இப்ராஹிம் கலீமுல்லா என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் ‘குசன்’ நாற்காலிகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டது. முதல் தளத்தில் மதராசா பள்ளியும், அதே தளத்தில் ஒரு அறையில் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களும் தங்கி இருந்தார்கள். 2–வது தளத்தில் இப்ராஹிம் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 3–வது தளத்தில் ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்தனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் தரை தளத்தில் உள்ள தொழிற்சாலையில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென அங்கிருந்த நாற்காலிக மற்றும் பிற பொருட்களில் பிடித்து எரிந்தது. மேலும் தரை தளத்தில் பிடித்த தீ கட்டிடத்தின் மற்ற தளங்களுக்கும் பரவி எரியத் தொடங்கியது. இதனால் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார்கள். ஆனால் மற்ற தளங்களில் வசித்தவர்களால் கீழே இறங்கி வரமுடியாமல் திணறினார்கள்.

4 மாணவர்கள் மீட்பு

இதுபற்றி அறிந்ததும் 6 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தார்கள். அவர்கள் கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். அதே நேரத்தில் கட்டிடத்தில் சிக்கி போராடியவர்களை மீட்கும் நடவடிக்கையிலும் இறங்கினார்கள். பின்னர் மதராசா பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 4 பேரை தீயணைப்பு படைவீரர்கள் பத்திரமாக மீட்டார்கள். மேலும் அடுக்குமாடி கட்டிடத்தின் மற்ற தளங்களில் சிக்கி தவித்தவர்களையும் ராட்சத ஏணி மூலம் தீயணைப்பு படைவீரர்கள் மீட்டார்கள்.

பின்னர் 4 மணிநேரத்திற்கும் மேலாக போராடி கட்டிடத்தில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. ஆனாலும் கட்டிடத்தில் இருந்து புகை வெளியேறிய வண்ணம் இருந்ததால், தீயணைப்பு படைவீரர்களால் உள்ளே செல்ல முடியாமல் போனது. அதன்பிறகு, ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட சிலிண்டர்களை உடலில் கட்டிக் கொண்டு கட்டிடத்திற்குள் தீயணைப்பு படைவீரர்கள் சென்றார்கள்.

2 பேர் உடல் கருகி சாவு

அப்போது கட்டிடத்திற்குள் 2 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்கள். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு கட்டிடத்திற்குள் இருந்து தீயணைப்பு படைவீரர்கள் வெளியே கொண்டு வந்தனர். போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் பெயர் அப்துல் ஹபீஸ்(வயது 35), மேக்தாப்(27) என்று தெரிந்தது. மேலும் தரை தளத்தில் இருந்த தொழிற்சாலையில் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததுடன், மற்ற தளங்களுக்கும் தீ பரவி இருக்கலாம் என்று தீயணைப்பு படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து சம்பவத்தில் 4 மாணவர்கள், 3 பெண்கள் உள்பட 10 பேர் மீட்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story