அரசு பஸ் மீது மோதிய டிப்பர் லாரி மொபட்டில் மோதியதில் கூலி தொழிலாளி பலி
அரசு பஸ் மீது மோதிய டிப்பர் லாரி மொபட்டில் மோதியதில் கூலி தொழிலாளி பலி
இலுப்பூர்,
இலுப்பூர் அருகே அரசு பஸ் பஸ் மீது மோதிய டிப்பர் லாரி மொட்டில் மோதியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலி தொழிலாளி பலி
இலுப்பூரில் இருந்து நேற்று மதியம் புதுக்கோட்டையை நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ் ஆரியூர் அருகே வந்து கொண்டிருந்தது. அந்த அரசு டவுன் பஸ்சின் பின்புறம் மாங்குடி அருகே உள்ள பணங்குடி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் (வயது 50) என்பவர் புதுக்கோட்டை நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில் அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூரை நோக்கி ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி அரசு டவுன் பஸ்சின் பின்பக்கம் மோதி, பின்னால் வந்த சேகரின் மொபட்டில் மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது மொபட் லாரி முன்பகுதியில் சிக்கி கொண்டது.
2 பயணிகள் படுகாயம்
மேலும் பஸ்சில் பயணம் செய்த இலுப்பூர் பகுதியை சேர்ந்த காஜாமைதீன் (32), சரவணன் (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து பற்றி அந்த பகுதியினர் அன்னவாசல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த காஜாமைதீன், சரவணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காஜாமைதீன் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், பிரேத பரிசோதனைக்காக உடலை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், உடனடியாக விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியில் சேகரின் உடலை ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை நோக்கி வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் ஆம்புலன்ஸ் வந்தது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் சேகரின் உடலை ஏற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.