பசுபதிபாளையத்தில் ரெயில்வே தண்டவாளத்தின் கீழ் குகைவழி பாதை அமைக்கும் பணி நிறைவு
பசுபதிபாளையத்தில் ரெயில்வே தண்டவாளத்தின் கீழ் குகைவழி பாதை அமைக்கும் பணி முடிவடைந்து. குகைவழிப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
கரூர்,
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 32, 33–வது வார்டு பகுதிகளில் பசுபதிபாளையம் வடக்கு தெரு, ஆண்டாள்நகர், ஏ.வி.பி.நகர், விசுவாசபுரம், வேலுப்பிள்ளை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கரூர்– திருச்சி, திண்டுக்கல் செல்லும் ரெயில்வே பாதை உள்ளது.
இதில் தினமும் ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த பகுதி பொதுமக்கள் கரூர் வரவேண்டும் என்றால் ரெயில்வே தண்டவாளத்தை தாண்டித்தான் வரவேண்டும். இதைத்தொடர்ந்து இந்த பகுதியில் ரெயில்வே குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
குகைவழி பாதைஇதைத்தொடர்ந்து கரூர்–பசுபதிபாளையம் பகுதியில் ரெயில்வே குகைவழி பாதை அமைக்க ரூ.7½ கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து குகைவழி பாதை அமைப்பதற்காக அந்த பகுதியில் 13 சிமெண்டு பிளாக்குகள் தயார் செய்யப்பட்டன. பின்னர் குகை வழிப்பாதை அமைப்பதற்காக கடந்த 25–ந் தேதி ரெயில்வே குகைவழி பாதை அமைய உள்ள இடத்தில் ரெயில் தண்டவாளத்தை வெட்டி எடுப்பதற்காக முதல் கட்டமாக தண்டவாளத்தில் இரு புறங்களிலும் எந்திரம் மூலம் துளை போடும் பணிகள் நடைபெற்றது.
இதையடுத்து 28–ந் தேதி கரூர்– திருச்சி செல்லும் ரெயில் தண்டவாளத்தின் கீழ் குகைவழி பாதை அமைக்கப்பட்டது.
ரெயில்கள் இயக்கப்படவில்லைஇதேபோன்று கரூர்–திண்டுக்கல் ரெயில்வே தண்டவாளத்தின் கீழ் நேற்று குகைவழி பாதை அமைய உள்ள இடத்தில் இரு புறங்களிலும் ரெயில் தண்டவாளம் முழுவதும் என்ஜின் மூலம் வெட்டி வேறு இடத்தில் வைக்கப்பட்டன. பின்னர் பொக்ளின் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு, ராட்சத கிரேன்கள் மூலம் சிமெண்டு பிளாக்குகள் பொருத்தப்பட்டன. தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்ட அதே இடத்தில் ரெயில் தண்டவாளம் பொருத்தப்பட்டது. இதில் 100–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் நேற்று காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை கரூர்– திண்டுக்கல் ரெயில் பாதையில் ரெயில்கள் இயக்கப்படவில்லை.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு...குகைவழி பாதை குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–
கரூர்– திருச்சி, கரூர்– திண்டுக்கல் ரெயில்வே தண்டவாளத்தின் கீழ் குகைவழி பாதை அமைக்கும் பணி முற்றிலும் முடிவடைந்துவிட்டது. தற்போது இந்த குகைவழி பாதையில் பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். வாகனங்கள் செல்லும் அளவிற்கு நகராட்சி சார்பில் தான் பாதை அமைக்க வேண்டும். நகராட்சி சார்பில் குகைவழி பாதைக்கு பாதை அமைத்து கொடுத்தால் அதில் வாகனங்கள் சென்றுவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.